மகப்பேறு உயிரிழப்புகளை குறைக்க களமிறங்கிய ‘போடா கேர்ள்ஸ்’ – கென்யாவில் உருவாகும் புதிய மாற்றம்
கென்யாவின் கிராமப்புற பகுதிகளில், கர்ப்பகாலம் மற்றும் பிரசவத்தின் போது ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்கும் நோக்கில், பெண் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அடங்கிய ‘போடா கேர்ள்ஸ்’ என்ற அமைப்பு குறிப்பிடத்தக்க சமூக மாற்றத்தை உருவாக்கி வருகிறது.
இவர்கள் வெறும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மட்டுமல்ல. அடிப்படை மகப்பேறு மருத்துவ அறிவு, நோயாளி பராமரிப்பு உள்ளிட்ட துறைகளில் சிறப்பு பயிற்சி பெற்ற பெண்களே இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் பலர் செவிலியர்கள், சுகாதார உதவியாளர்கள் என மருத்துவத் துறையிலும் அனுபவம் பெற்றவர்களாக உள்ளனர்.
தொலைதூர கிராமங்களில் வசிக்கும் கர்ப்பிணிப் பெண்களை, வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் மற்றும் பிரசவத்திற்காக மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பது இவர்களின் முக்கிய பணியாகும். இந்த சேவை முழுவதும் கட்டணமின்றி வழங்கப்படுகிறது.
மருத்துவ வசதிகள் எளிதில் கிடைக்காத பகுதிகளில், ஒரு சாதாரண மோட்டார் சைக்கிளை ஊடகமாகக் கொண்டு சுகாதார கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை நிரப்பும் இந்த பெண்களின் முயற்சி, உலகம் முழுவதும் பாராட்டுகளைப் பெற்று வருகிறது