ஜம்மு–காஷ்மீரில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் ரகசிய முகாம் கண்டுபிடிப்பு
ஜம்மு–காஷ்மீர் மாநிலம் கிஷ்துவார் மாவட்டத்தில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பினர் பயன்படுத்தியதாகக் கருதப்படும் ரகசிய பதுங்கு இடம் பாதுகாப்புப் படையினரால் கண்டறியப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் வரும் 26ஆம் தேதி குடியரசு தின விழா நடைபெற உள்ள நிலையில், ஜம்மு–காஷ்மீர் எல்லைப் பகுதிகள் வழியாக பயங்கரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் முயற்சி மேற்கொண்டு வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. குறிப்பாக, கிஷ்துவார் மாவட்டத்தின் மாண்ட்ரல்–சிங்போரா பகுதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் மறைந்து இருக்கலாம் என தகவல்கள் கிடைத்தன.
இதனைத் தொடர்ந்து, “ஆப்ரேஷன் டிராஷி–1” என்ற பெயரில், சோனார் கிராமம் மற்றும் அதனைச் சுற்றிய மலைப்பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
இந்த சோதனையின் போது, கடல் மட்டத்திலிருந்து சுமார் 12,000 அடி உயரத்தில் அமைந்த மலைப்பகுதியில், பயங்கரவாதிகள் மிகுந்த பாதுகாப்புடன் உருவாக்கிய வலுவான ரகசிய பதுங்கு குழி கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த இடத்தில் இருந்து, 50 நூடுல்ஸ் பாக்கெட்டுகள், காய்கறிகள், மசாலா பொருட்கள், பாஸ்மதி அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் முக்கிய தளபதியான சைபுல்லா மற்றும் அவரது துணை தளபதி ஆதில் ஆகியோர் இந்த பதுங்கு இடத்தை பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, அப்பகுதியில் இருந்து தப்பியோடியதாக கருதப்படும் பயங்கரவாதிகளை கண்டறிய, பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.