ட்ரம்பால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு நிம்மதி செய்தி! – ட்ரம்பின் திமிர் அரசியலுக்கு விரைவில் முடிவு?
அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள இடைக்காலத் தேர்தல், அதிபர் டொனால்ட் ட்ரம்பின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய திருப்பமாக அமையலாம். இந்தத் தேர்தலில் குடியரசுக் கட்சி தோல்வியை சந்தித்தால், ட்ரம்பின் அதிகார பலம் கடுமையாக குறையும் என்றும், அவரது அரசியல் செல்வாக்கு பெரிதும் சிதறும் என்றும் அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.
டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக பொறுப்பேற்று இன்னும் ஒரு ஆண்டுதான் முடிந்திருக்கிறது. ஆனால், இந்த குறுகிய காலத்திலேயே அவர் எடுத்த முடிவுகள், அறிவிப்புகள் மற்றும் நடவடிக்கைகள் உலக நாடுகளை பெரும் குழப்பத்திற்குள் தள்ளியுள்ளன. அவரது பதவிக்காலம் முடிவடைய இன்னும் மூன்று ஆண்டுகள், அதாவது சுமார் 1,096 நாட்கள் உள்ள நிலையில், இத்தனை நாட்கள் இந்த அரசியல் குழப்பத்தை உலகம் சகிக்க வேண்டுமா என்ற கேள்வி பலரிடமும் எழுந்துள்ளது.
அத்தகையவர்களுக்கு நிம்மதியான செய்தியாக, இந்த ஆண்டின் இறுதியில் நடைபெற உள்ள அமெரிக்க இடைக்காலத் தேர்தல் பார்க்கப்படுகிறது. அந்தத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றால், ட்ரம்பின் அதிரடி அரசியலுக்கு பெரிய அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்பது உறுதி.
நவம்பர் 3-ஆம் தேதி நடைபெற உள்ள இந்தத் தேர்தலில், அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் 435 இடங்களுக்கும், செனட் சபையின் சுமார் 35 இடங்களுக்கும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதோடு சேர்த்து, 36 மாகாணங்களில் ஆளுநர் தேர்தல்களும், பல மாநிலங்களில் உள்ளூர் நிர்வாக அமைப்புகளுக்கான தேர்தல்களும் ஒரே நாளில் நடைபெறவுள்ளன.
இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சி பெரும்பான்மை பெற்றால், அமெரிக்க நாடாளுமன்றத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகரிக்கும். அவ்வாறு நடந்தால், ட்ரம்புக்கு எதிராக பதவிநீக்க நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் வாய்ப்பு உருவாகும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
தற்போது, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியரசுக் கட்சிக்கு ஓரளவு பலம் இருப்பதால்தான், ட்ரம்ப் முன்வைக்கும் பல சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேறி வருகின்றன. ஆனால், இந்த நிலை மாறி ஜனநாயகக் கட்சி மேலாதிக்கம் பெற்றால், ட்ரம்ப் கொண்டு வரும் பல சட்டங்களுக்கு தடையிடப்படும்.
அப்படி நடந்தால், அடுத்த மூன்று ஆண்டுகள் ட்ரம்ப் பெயரளவு அதிபராக மட்டுமே இருப்பார் என்றும், அவரது அரசியல் பற்கள் பிடுங்கப்பட்ட விஷமில்லாத பாம்பாக மாறிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், ஜனநாயகக் கட்சி வெற்றி பெற்றால், நாடாளுமன்ற குழுக்களின் தலைமை பொறுப்புகளையும் அவர்கள் கைப்பற்ற முடியும். அதன் மூலம், ட்ரம்பின் நிர்வாக செயல்பாடுகள், கொள்கை முடிவுகள், தனிப்பட்ட விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்தையும் விசாரிக்கவும் அதிகாரம் கிடைக்கும்.
அமெரிக்காவில் நிதி தொடர்பான எந்தச் சட்டமும் அமலுக்கு வர, பிரதிநிதிகள் சபையின் ஒப்புதல் அவசியம். அந்தச் சபையில் எதிர்க்கட்சியினர் வலுவடைந்தால், ட்ரம்பின் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதிலேயே சிக்கல் உருவாகும். இவ்வாறு, இடைக்காலத் தேர்தலில் ட்ரம்பின் கட்சி தோல்வியடைந்தால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிடலாம்.
இந்தச் செய்திகளை கேட்கும் போது பலருக்கு மனதளவில் நிம்மதி பிறக்கும். ஆனால் உண்மையில் ட்ரம்பின் கட்சி தோல்வியடைவது சாத்தியமா? என்ற கேள்விக்கு, “ஆமாம்” என உறுதியாக பதில் அளிக்கின்றன கருத்துக்கணிப்புகளும், அமெரிக்காவின் தேர்தல் வரலாறும்.
தமிழ்நாட்டில் இடைத்தேர்தல்களில் பெரும்பாலும் ஆளும் கட்சி வெற்றி பெறுவது வழக்கம். ஆனால், அமெரிக்க அரசியல் சூழல் அதற்கு நேர்மாறானது. அங்கு இடைக்காலத் தேர்தல்களுக்கும் ஆளும் கட்சிக்கும் எப்போதும் ஒத்துப்போகவில்லை.
1946 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை அமெரிக்காவில் நடைபெற்ற 20 இடைக்காலத் தேர்தல்களில், 18 தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வியடைந்து, எதிர்க்கட்சியே வெற்றிபெற்றுள்ளது. இந்த புள்ளிவிவரங்களை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ‘தி கன்வர்சேஷன்’ என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வர்ஜீனியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் ராபர்ட் ஏ. ஸ்ட்ராங், ஐசனோவர், ஜான் எப். கென்னடி, ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்ட் ஃபோர்டு, ரொனால்ட் ரீகன், ஜார்ஜ் புஷ் உள்ளிட்ட பல பிரபல அமெரிக்க அதிபர்களும் கூட இடைக்காலத் தேர்தலில் தோல்வியை சந்தித்துள்ளனர் என்பதை நினைவுபடுத்துகிறார்.
இந்த வரலாற்றுப் பின்னணியை மீறி வெற்றி பெற, ட்ரம்ப் மிகப்பெரிய மக்கள் ஆதரவை பெற்றிருக்க வேண்டும். ஆனால், அந்த அளவிலான செல்வாக்கு தனக்கு உள்ளது என்று ட்ரம்பே நம்ப மாட்டார் என விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ட்ரம்பின் இரண்டாம் கட்ட ஆட்சிக்காலத்தில், ஒவ்வொரு அமெரிக்க குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 1,100 முதல் 1,600 டாலர் வரை கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நாட்டில் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக, பீட்டர்சன் சர்வதேச பொருளாதார ஆய்வு நிறுவனம் எச்சரிக்கிறது.
மேலும், அமெரிக்க தொழிலாளர் புள்ளியியல் அலுவலகத்தின் தகவலின்படி, 2024 ஆம் ஆண்டு இறுதியில் 4.1 சதவீதமாக இருந்த வேலைவாய்ப்பின்மை விகிதம், 2025 நவம்பர் மாதத்தில் 4.6 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த நிலைமைகள் அனைத்தும், ட்ரம்ப் மீது அமெரிக்க மக்களிடையே உருவாகி வரும் அதிருப்தியை வெளிப்படுத்துகின்றன.
Real Clear Polling உள்ளிட்ட பிரபல கருத்துக்கணிப்பு நிறுவனங்களின் ஆய்வுகளும், ட்ரம்புக்கு எதிரான மனநிலையே மக்களிடையே மேலோங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்துகின்றன.
மொத்தத்தில், அமெரிக்காவின் தேர்தல் வரலாறு, தற்போதைய மக்கள் மனநிலை, கருத்துக்கணிப்பு முடிவுகள் என அனைத்துமே ட்ரம்பிற்கு சாதகமாக இல்லை.
எனவே, இந்த ஆண்டு நடைபெறும் இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். அப்படி நடந்தால், தொடக்கத்தில் சொன்னதுபோல், ட்ரம்பின் அரசியல் விஷப்பல் பிடுங்கப்பட்டு விடும்.
இந்த நாள் வருவதற்காக, அமெரிக்காவின் எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, உலக நாடுகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.