டெல்லியில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்களுக்கு இரவுப் பணி அனுமதி
டெல்லி மாநில அரசு, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் பெண்களை இரவுப் பணிகளில் ஈடுபடுத்த அனுமதி அளித்துள்ளது.
இந்த முடிவு தொடர்பான திட்டத்திற்கு, டெல்லி துணை நிலை ஆளுநர் வி.கே. சக்சேனா இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்புதல் அளித்திருந்தார். அதனைத் தொடர்ந்து, டெல்லி அரசின் தொழிலாளர் துறை இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், 1954-ஆம் ஆண்டின் டெல்லி கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் சட்டத்தில் பெண்கள் பணியாற்றும் விதிமுறைகள் மற்றும் பணி நிலைகள் குறித்து இரண்டு புதிய பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி, பெண்கள் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இரவுப் பணியில் சேரலாம், ஆனால் அதற்காக அவர்களின் எழுத்துப்பூர்வ சம்மதம் கட்டாயம். எந்த பணியாளரும் ஒருநாளில் 9 மணி நேரத்திற்கும், ஒரு வாரத்தில் 48 மணி நேரத்திற்கும் மேலாக வேலை செய்யக்கூடாது.
இரவுப் பணியில் ஈடுபடும் அல்லது கூடுதல் நேர பணி (overtime) செய்யும் பணியாளர்களுக்காக, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதிகளை உரிமையாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், எந்த பணியாளரும் தொடர்ச்சியாக 5 மணி நேரத்துக்கு மேல் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
கூடுதல் நேரப் பணிக்கு (overtime) ஊதியம் இரண்டு மடங்காக வழங்கப்பட வேண்டும். அதேபோல், எந்தப் பெண் தொழிலாளரும் தொடர்ச்சியாக இரவுப் பணியில் மட்டுமே ஈடுபட கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.
பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும், பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவு தடுப்பு சட்டம், 2013ன் கீழ் உள் புகார் குழு (Internal Complaints Committee) அமைக்கப்பட வேண்டும். பணியிடங்களில் CCTV கேமராக்கள் நிறுவப்பட்டு, அதன் பதிவுகள் குறைந்தது ஒரு மாதம் வரை பாதுகாக்கப்பட வேண்டும்.
தேசிய விடுமுறை நாட்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு இழப்பீட்டு விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும், அவர்களுக்கு வாராந்திர விடுமுறை, குறைந்தபட்ச ஊதியம், வருங்கால வைப்பு நிதி (PF), காப்பீடு, மற்றும் போனஸ் போன்ற சட்டப்பூர்வ நலன்களும் வழங்கப்பட வேண்டும் என அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.