இஸ்லாமிய நேட்டோவுக்கு எதிராக இந்தியா உருவாக்கும் புதிய புவிசார் அரசியல் கூட்டணி!
பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் நெருங்கிய உறவை வளர்த்து வரும் சவூதி அரேபியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில், இந்தியாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் (UAE) தனது உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இதன் பின்னணியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் சயீத் அல் நஹ்யான் இந்தியா வந்திருப்பது, சர்வதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரானை அமெரிக்கா தாக்குமா, எப்போது தாக்கும் என்ற குழப்பம் நீடித்து வரும் நிலையில், ஏமன் விவகாரத்தைச் சுற்றி சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கிடையே முரண்பாடுகள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், 1991ஆம் ஆண்டிலிருந்து சோமாலியாவிலிருந்து பிரிந்து தனி அரசாக செயல்பட்டு வரும் சோமாலிலாந்தை, சுதந்திர நாடாக இஸ்ரேல் அங்கீகரித்துள்ளது. இந்த நடவடிக்கைக்கு துருக்கி, சவூதி அரேபியா, எகிப்து, ஓமன், ஜோர்டான் உள்ளிட்ட பல மத்திய கிழக்கு இஸ்லாமிய நாடுகள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
மேலும், ஆபிரகாம் உடன்படிக்கையில் இணைவதற்கு சோமாலிலாந்து விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் இஸ்ரேல் அறிவித்துள்ளது. சோமாலிலாந்து அங்கீகாரத்திற்கு பின்னணியில் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஆதரவு இருப்பதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
கல்ஃப் கூட்டமைப்பில் உள்ள பஹ்ரைன், ஓமன், குவைத், கத்தார், சவூதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய ஆறு நாடுகளில், 2020ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் ஆபிரகாம் ஒப்பந்தத்தில் இணைந்த முதல் நாடுகள் ஐக்கிய அரபு அமீரகமும் பஹ்ரைனும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, கடந்த ஆண்டு சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையே பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்தானது. அணு ஆயுத வல்லமை கொண்ட பாகிஸ்தான், பொருளாதார பலம் கொண்ட சவூதி அரேபியா மற்றும் நேட்டோவில் இரண்டாவது பெரிய இராணுவத்தை கொண்ட துருக்கி ஆகிய மூன்று நாடுகளும் இணைந்து, ஒரு இஸ்லாமிய நேட்டோ போன்ற இராணுவ அமைப்பை உருவாக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக செயல்பட்டது. துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகன், தனது சமூக வலைதளப் பதிவில், பாகிஸ்தான்–துருக்கி நட்பு என்றென்றும் நீடிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.
இந்தியாவுக்கு எதிரான மற்றும் பாகிஸ்தானுக்கு ஆதரவான துருக்கியின் நிலைப்பாடு, ஐக்கிய நாடுகள் சபையிலும் வெளிப்பட்டுள்ளது.
இந்நிலையில், துருக்கிக்கு எதிரான நிலைப்பாட்டில் உள்ள சைப்ரஸ் நாட்டுடன் இந்தியா உறவுகளை வலுப்படுத்தியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளில் முதன்முறையாக பிரதமர் நரேந்திர மோடி சைப்ரஸுக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு, சைப்ரஸ் அதிபர் நிக்கோஸ் கிறிஸ்டோடௌலிட்ஸ், அந்நாட்டின் உயரிய விருதான “மாரியோஸ் III கிராண்ட் கிராஸ்” விருதை பிரதமர் மோடிக்கு வழங்கினார்.
இந்த பயணத்தின் போது, இருதரப்பு உறவுகள் மட்டுமல்லாமல், இந்தியா–மத்திய கிழக்கு–ஐரோப்பா பொருளாதார வழித்தடமான IMEC திட்டத்தை மேம்படுத்துவது குறித்தும் பிரதமர் மோடி விரிவான செயல்திட்டங்களை முன்வைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சைப்ரஸ் மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை, ஐநா பாதுகாப்பு சபையில் இந்தியாவுக்கு நிரந்தர உறுப்பினர் பதவி உள்ளிட்ட முக்கிய விஷயங்களில் இந்தியாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன.
1983ஆம் ஆண்டுக்கு பிறகு, இந்திய பிரதமர் ஒருவர் முதன்முறையாக கிரேக்கம் சென்ற நிலையில், பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் கிரியகோஸ் மிட்சோடாகிஸுடன் பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஏற்கெனவே, இஸ்ரேல்–சைப்ரஸ்–கிரேக்கம் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு பாதுகாப்பு கூட்டணி இருந்து வருகிறது. கூட்டு இராணுவப் பயிற்சிகள், ட்ரோன் தொழில்நுட்பங்கள், மின்னணு போர்முறைகள், உளவுத்துறை தகவல் பரிமாற்றம் மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஆகியவற்றில் மூன்று நாடுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த கூட்டணியில் இந்தியாவும் இணைய இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, துருக்கிக்கு எதிரான சக்திவாய்ந்த எதிர் அணியாக, இஸ்ரேல்–சைப்ரஸ்–கிரேக்கம்–இந்தியா கூட்டணி உருவாகும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இந்தியா தலைமையிலான மத்திய தரைக்கடல் கூட்டணி, சவூதி அரேபியா–பாகிஸ்தான்–துருக்கி இணைந்து உருவாக்க முயற்சிக்கும் இஸ்லாமிய நேட்டோவின் செல்வாக்கை கட்டுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2020ஆம் ஆண்டு இஸ்ரேலுடன் தூதரக உறவை தொடங்கியதன் மூலம், மத்திய கிழக்கில் புதிய அரசியல் அத்தியாயத்தைத் தொடங்கிய ஐக்கிய அரபு அமீரகம், தற்போது இந்த இந்தியா–இஸ்ரேல்–சைப்ரஸ்–கிரேக்கம் கூட்டணியில் இணையலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த சூழலில், ஐக்கிய அரபு அமீரக அதிபரின் இந்திய வருகை, உலக அரசியல் களத்தில் புதிய சக்தி சமநிலையை உருவாக்கும் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.