காசியின் அடையாளமாக விளங்கும் மணிகர்ணிகா படித்துறையில் உண்மையில் நடைபெறுவது என்ன?
இந்துக்களின் ஆன்மிகத் தலைநகராக விளங்கும் காசி எனப்படும் வாரணாசியில் அமைந்துள்ள மணிகர்ணிகா படித்துறையில் கோயில்கள் மற்றும் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த பின்னணியில் அங்கு நடைபெறும் பணிகள் குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி நகரம், ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆன்மிக மரபுகளைக் கொண்ட நகரமாக கருதப்படுகிறது. காசி, பனாரஸ், பிரம்மவர்தா என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்த புனித நகரத்தில் சுமார் 23 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
கங்கை நதிக்கரையில் ஆதிகாலத்தில் 84 படித்துறைகள் இருந்ததாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. காலப்போக்கில் அவற்றில் பல மறைந்து, தற்போது சுமார் 30 படித்துறைகள் மட்டுமே காணப்படுகின்றன. இவற்றில் மணிகர்ணிகா, அரிச்சந்திரன் மற்றும் தசாஷ்வமேத படித்துறைகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவற்றில் அளவிலும் பயன்பாட்டிலும் மிகப்பெரியது மணிகர்ணிகா படித்துறையாகும்.
காசியில் உயிர் நீத்தால் முக்தி கிடைக்கும் என்பது இந்து மரபு நம்பிக்கை. இதன் காரணமாக, பலர் காசியில் இறுதி மூச்சை விட விரும்புகின்றனர். மேலும், நாட்டின் பல பகுதிகளில் உயிரிழந்தவர்களின் உடல்கள் இங்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப்படுகின்றன. மணிகர்ணிகா படித்துறையில் பகல், இரவு என்ற வேறுபாடின்றி எந்நேரமும் தகனச் சடங்குகள் நடைபெற்று வருகின்றன. ஒரே நாளில் 300-க்கும் மேற்பட்ட உடல்களை தகனம் செய்யும் திறன் கொண்டது இந்த படித்துறை.
இத்தகைய ஆன்மிக முக்கியத்துவம் கொண்ட இடத்தில், தற்போது “மணிகர்ணிகா தீர்த்த வழித்தட மேம்பாட்டுத் திட்டம்” என்ற பெயரில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக உயர்த்தப்பட்ட தகன மேடை ஒன்று அகற்றப்பட்டதைத் தொடர்ந்து, புல்டோசர்கள் இயங்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இதனுடன் கோயில்கள் மற்றும் சிலைகள் அழிக்கப்பட்டதாக கூறப்படும் புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தன. உத்தரபிரதேச காங்கிரஸ் தலைவர் அஜய் ராய் உள்ளிட்டோர், இந்த நடவடிக்கை சனாதன மரபுகளுக்கும் காசியின் பாரம்பரியத்திற்கும் எதிரானது என குற்றம் சாட்டினர். வளர்ச்சி என்ற பெயரில் காசியின் ஆன்மிக அடையாளம் சிதைக்கப்படுவதாகவும் அவர்கள் விமர்சனம் முன்வைத்தனர்.
இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் நேரில் மணிகர்ணிகா படித்துறைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு கோயில்கள் அல்லது சிலைகள் சேதப்படுத்தப்பட்டதாக கூறுவது முற்றிலும் தவறான தகவல் என அவர் தெளிவுபடுத்தினார்.
மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட விளக்கத்தில், கட்டுமானப் பணிகளின் போது சில சிலைகள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டதாகவும், அவை எந்தவித சேதத்திற்கும் உள்ளாகவில்லை என்றும் தெரிவித்தது. வாரணாசி மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர குமார், அனைத்து சிலைகளும் பாதுகாப்பாக தொல்பொருள் துறை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், பணிகள் முடிந்ததும் உரிய மரியாதையுடன் மீண்டும் நிறுவப்படும் என்றும் கூறினார்.
மணிகர்ணிகாவில் உள்ள மாசன், தர்கேஷ்வர் மற்றும் ரத்னேஷ்வர் கோயில்கள் எந்த மாற்றமுமின்றி அதே இடத்தில் இருப்பதை தற்போதைய புகைப்படங்கள் உறுதிப்படுத்துகின்றன. இருப்பினும், மேம்பாட்டிற்காக ஒரு தகன மேடையும் சில பழைய துணை கட்டமைப்புகளும் அகற்றப்பட்டுள்ளன.
அங்கு பணியாற்றும் பூசாரிகள், மறுசீரமைப்புக்கு தங்களுக்குத் தனிப்பட்ட எதிர்ப்பு இல்லை என்றாலும், இத்தகைய புனித இடங்களில் கூடுதல் கவனத்துடன் பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என கருத்து தெரிவித்துள்ளனர்.
மணிகர்ணிகா மறுசீரமைப்பு திட்டம் ஆரம்பத்தில் சுமார் 3,000 சதுர மீட்டர் பரப்பளவில் தொடங்கப்பட்டு, இறுதியில் 39,350 சதுர மீட்டர் பரப்பளவிற்கு விரிவடைய உள்ளது. இந்த திட்டம் நிறைவடைந்ததும், ஒரே நேரத்தில் 19 தகனங்களை நடத்தக்கூடிய நவீன வசதிகளுடன் கூடிய மிகப்பெரிய தகன வளாகமாக மணிகர்ணிகா மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான நெரிசல், குறுகிய பாதைகள், சுகாதாரக் குறைபாடுகள் மற்றும் இறுதி சடங்குகளில் பங்கேற்க வரும் உறவினர்களுக்கான வசதியின்மை போன்ற காரணங்களே இந்த மறுசீரமைப்புக்கு அடிப்படையாகக் கூறப்படுகின்றன. குறிப்பாக மழைக்காலங்களில் சாம்பல் மற்றும் புகை குடியிருப்புப் பகுதிகளுக்குள் பரவுவது குறித்து நீண்ட காலமாக புகார்கள் இருந்தன.
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில், பிரதமர் நரேந்திர மோடி 2023ஆம் ஆண்டு மணிகர்ணிகா தீர்த்த மேம்பாட்டுத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். ஸ்ரீ காசி விஸ்வநாத் கோயில் அறக்கட்டளை நிதியின் மூலம் இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
பணிகள் முழுமை பெற்றதும், மேம்பட்ட அணுகல் சாலைகள், சுத்தமான சூழல், அமர்விடங்கள் மற்றும் சடங்கு மேற்கொள்ளும் வசதிகளுடன், காசி வழித்தடத் திட்டத்தின் நீட்டிப்பாக மணிகர்ணிகா உருவெடுக்கும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
தற்போது பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், மணிகர்ணிகா மறுசீரமைப்பு திட்டம் நம்பிக்கை, பாரம்பரியம் மற்றும் நவீன நகர்ப்புற வளர்ச்சி ஆகிய மூன்றையும் இணைக்கும் முயற்சியாக அமைந்துள்ளது. விரைவில் அதன் முழு வடிவம் வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.