விஜய் விவகாரம்: நடிகர் சங்கம் தன்னிச்சையாக தலையிடாது – குஷ்பு பேட்டி
ஜனநாயகன் தொடர்பான விவகாரத்தில் நடிகர் விஜய்க்கு நடிகர் சங்கம் தானாக முன்வந்து ஆதரவு வழங்காது என பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகர்கள் சார்பில் அதிகாரப்பூர்வ கோரிக்கை முன்வைக்கப்பட்டால் மட்டுமே நடிகர் சங்கம் உதவிக்கு வரும் என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குஷ்பு, சிபிஐ விசாரணையில் நடிகர் விஜய் முழுமையாக ஒத்துழைப்பார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகக் கூறினார்.
மேலும், பராசக்தி திரைப்படத்திற்கு எதிராக கருத்து தெரிவித்தது காங்கிரஸ் கட்சிதான் என்றும், அதனை வேறு விதமாக திருப்புவது தவறானது என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது தமிழகத்தில் காளான் போல யூடியூப் சேனல்கள் அதிகரித்து வருவதாக விமர்சித்த குஷ்பு, திமுக ஆட்சியில் மாநிலம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்கள் டாஸ்மாக் மதுபான விற்பனை மற்றும் போதைப்பொருள் புழக்கம் தான் என குற்றம்சாட்டினார்.