“கட்சியின் பணிகளில் நிதின் நபினே தலைமைக் பொறுப்பு; நான் சாதாரண தொண்டன்” – பிரதமர் மோடி
கட்சிசார்ந்த முடிவுகள் மற்றும் செயல்பாடுகளில் நிதின் நபினே தன்னுடைய வழிகாட்டி என்றும், தாம் பாஜகவின் ஒரு சாதாரண தொண்டன் மட்டுமே என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற பாஜக தேசிய தலைவர் நிதின் நபின் பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்களை நோக்கி உரையாற்றிய பிரதமர் மோடி, உலகின் மிகப்பெரிய அரசியல் இயக்கமான பாஜகவை வழிநடத்தும் பொறுப்பை நிதின் நபின் ஏற்றுள்ளதை பெருமையாக குறிப்பிட்டார்.
புதிய பொறுப்பேற்ற நிதின் நபினுக்கு தனது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்த அவர், பாஜக நிர்வாகத்தை முன்னெடுப்பது மட்டுமல்லாமல், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பல்வேறு கட்சிகளுக்கிடையே ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் வலுப்படுத்துவது அவரது முக்கிய கடமையாக இருக்கும் என கூறினார்.
மேலும், கட்சி தொடர்பான விவகாரங்களில் நிதின் நபினின் முடிவுகளே இறுதியானவை என்றும், தாம் கட்சியின் அடிப்படை நிலை தொண்டனாகவே செயல்படுவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.
நாட்டின் பல மாநிலங்களில் பாஜக தொடர்ந்து வெற்றிப் பயணம் மேற்கொண்டு வருவதாக கூறிய அவர், எதிர்காலத்தில் கேரளாவிலும் பாஜக ஆட்சி அமையும் என்ற உறுதியான நம்பிக்கையையும் வெளிப்படுத்தினார்.