பாஜக தேசியத் தலைமை பொறுப்புக்கு நிதின் நபின் ஏகோபித்த தேர்வு
பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவராக நிதின் நபின் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பாஜகவின் விதிமுறைகளின்படி தேசியத் தலைவரின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் ஆகும். அந்த வகையில், 2020ஆம் ஆண்டு இப்பதவியை ஏற்றுக் கொண்ட ஜெ.பி. நட்டாவின் பதவிக்காலம், 2024 மக்களவைத் தேர்தலைக் கருத்தில் கொண்டு நீட்டிக்கப்பட்டிருந்தது.
கட்சியின் எதிர்கால வளர்ச்சியை கருத்தில் கொண்டு, இளம் தலைமையினருக்கு தலைமை பொறுப்பு வழங்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் முடிவைத் தொடர்ந்து, பீகார் மாநில அமைச்சரான நிதின் நபின் கடந்த ஆண்டு டிசம்பர் 14ஆம் தேதி பாஜக தேசிய செயல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
பாஜக தேசியத் தலைவர் பதவிக்கான தேர்தலில், நிதின் நபினை ஆதரித்து 37 பேர் முன்மொழிவு வேட்புமனுக்கள் தாக்கல் செய்தனர். இதனால் அவர் போட்டியின்றி கட்சியின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, டெல்லியில் அமைந்துள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியில் நிதின் நபின் தேசியத் தலைவராக முறையாகப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, கிரண் ரிஜிஜு உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்டனர்.