பாஜக தேசியத் தலைவராக நிதின் நபின் பொறுப்பேற்பு
பிஹார் மாநில அரசில் சாலை மற்றும் போக்குவரத்துத் துறையை நிர்வகித்த அமைச்சராகவும், பாரதிய ஜனதா கட்சியின் சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் ஒருங்கிணைப்பாளராகவும் சிறப்பாக பணியாற்றிய 45 வயதான திரு. நிதின் நபின், பாஜக தேசியத் தலைமைப் பதவிக்கு ஒருமித்த ஆதரவுடன் தேர்வு செய்யப்பட்டிருப்பது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
இளமையிலேயே அரசியல் பாதையில் அடியெடுத்து வைத்து, கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக கட்சிக்காக முழுமையாக அர்ப்பணித்து உழைத்த அவர், இளைஞர் அணி தேசியச் செயலாளர் உள்ளிட்ட பல முக்கிய பொறுப்புகளை ஏற்று திறம்பட செயல்பட்டு, படிப்படியாக உயர்ந்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலத் தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட காலகட்டத்தில், தன்னுடைய திட்டமிட்ட அணுகுமுறையாலும், அயராத உழைப்பினாலும் பாஜகவை பெருவெற்றிப் பாதையில் கொண்டு சென்றது குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
மேலும், 2006, 2010, 2015, 2020 மற்றும் 2025 ஆகிய ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று, 45 வயதிலேயே ஐந்தாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வானதன் மூலம், பிஹார் மக்களின் உறுதியான ஆதரவைப் பெற்ற தலைவராக அவர் திகழ்கிறார்.
உலகிலேயே அதிக உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியை வழிநடத்தும் உயரிய பொறுப்பிற்கு, திறமை, அனுபவம் மற்றும் இளமை ஆகியவற்றின் சிறந்த சேர்க்கையாகத் திகழும் திரு. நிதின் நபின் போன்ற இளம் தலைவரை தேர்வு செய்ததன் மூலம், இளைஞர்களின் மீது பாஜக கொண்டுள்ள நம்பிக்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
வயது என்ற எல்லைக்குள் சிக்காமல், மக்கள் நலனுக்காக உண்மையான அர்ப்பணிப்புடன் செயல்படுவோருக்கு தலைமைப் பொறுப்புகளை வழங்கும் ஜனநாயக மரபைக் கொண்ட கட்சியின் ஓர் உறுப்பினராக நான் இருப்பதில், என் உள்ளம் பெருமிதத்தால் நிரம்புகிறது.