அமேசான் காட்டில் வாழும் தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியினர் – வெளியான அரிய காட்சி
அமேசான் மழைக்காடுகளில் வெளியுலகத் தொடர்பின்றி வாழ்ந்து வரும் அரிதான பழங்குடியின மக்களைப் பற்றிய புதிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
வெளியினருடன் எந்தவிதமான தொடர்பும் இல்லாமல் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருபவர்கள் ‘மாஷ்கோ பிரோ’ எனப்படும் பழங்குடியினர் ஆவர். பொதுவாக, வெளியாட்களை சந்திக்கும் போது இவர்கள் கடும் எதிர்ப்புடன் நடந்து கொள்வதோடு, தாக்குதலுக்கும் தயாராக இருப்பது வழக்கம்.
இந்நிலையில், லெக்ஸ் ஃபிரிட்மேன் பாட்காஸ்டில் சூழலியல் ஆய்வாளரான பால ரொசோலி பகிர்ந்துள்ள வீடியோவில், மாஷ்கோ பிரோ மக்கள் தங்களது ஆயுதங்களை விலக்கி வைத்து, உணவுப் பொருட்கள் நிரம்பிய படகை ஏற்றுக்கொள்ளும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
பல நூற்றாண்டுகளாக மாற்றமின்றி தொடரும் இவர்களின் வாழ்க்கை முறையை இவ்வளவு தெளிவாக பதிவு செய்தது இதுவே முதன்முறையாகும் என பால ரொசோலி தெரிவித்துள்ளார்.
வெளி உலகத்திலிருந்து விலகி வாழ்ந்து வந்த இந்த பழங்குடியினர் சமீப காலமாக அடிக்கடி வெளிப்படத் தொடங்கியதற்கு, அவர்களின் வாழ்விடங்கள் தற்போது கடும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வருவதே முக்கிய காரணம் என அவர் விளக்கினார்.
போதைப்பொருள் கடத்தல் கும்பல்களின் ஊடுருவலும், மரத் தொழிற்சாலைகளுக்காக காடுகளுக்குள் அமைக்கப்படும் நீண்ட தூர சாலைகளும், இந்த பழங்குடியினர் வெளியில் தென்படுவதற்கான முக்கிய காரணங்களாக கருதப்படுகின்றன.