ஈரானில் அரங்கேறும் பயங்கரம் – கூலிப்படைகள் மூலம் மக்கள் அடக்குமுறையா?
ஈரானில் தொடரும் மக்கள் போராட்டங்களை ஒடுக்க, வெளிநாட்டு கூலிப்படையினரை களமிறக்கியுள்ளதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஈராக்கில் இருந்து ஐந்தாயிரம் கூலிப்படையினர் ஈரானுக்குள் நுழைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தகவல்கள் உண்மையா? அவர்கள் யார்? ஏன் வரவழைக்கப்பட்டனர்? என்ற கேள்விகள் தற்போது உலக அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
போராட்டமாக தொடங்கி புரட்சியாக மாறிய நிலை
டிசம்பர் 28ஆம் தேதி முதல் ஈரான் முழுவதும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. 1979ஆம் ஆண்டு மன்னராட்சியிலிருந்து இஸ்லாமிய குடியரசாக மாறிய ஈரான், மேற்காசிய அரசியலில் முக்கிய நாடாக விளங்கினாலும், சமீப காலமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
ரியல் நாணயத்தின் வீழ்ச்சி, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, வேலைவாய்ப்பு குறைவு, ஊழல் குற்றச்சாட்டுகள் என பல்வேறு காரணங்கள் மக்களின் கோபத்தை வெளிப்படையாகக் கிளப்பியுள்ளது. ரொட்டி, பால் போன்ற அடிப்படை உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்ததால், மக்கள் தெருக்களில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இளைய தலைமுறை எதிர்ப்பு
தனிமனித சுதந்திரம், பெண்களுக்கு விதிக்கப்பட்ட ஆடை கட்டுப்பாடுகள், மத அடிப்படையிலான கடுமையான சட்டங்கள் ஆகியவற்றால் நீண்ட காலமாக அதிருப்தியில் இருந்த GEN Z இளைஞர்கள், இந்தப் போராட்டங்களில் முன்னணியில் நிற்கிறார்கள். “இது வெறும் போராட்டமல்ல, புரட்சி” என்ற முழக்கங்கள் ஈரான் முழுவதும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.
பாதுகாப்புப் படைகள் தயக்கம் – கூலிப்படை குற்றச்சாட்டு
போராட்டங்களை அடக்க அரசு பாதுகாப்புப் படைகளை களமிறக்கியது. ஆனால், சொந்த நாட்டு மக்கள்மீது துப்பாக்கி சூடு நடத்த பல பாதுகாப்பு வீரர்கள் மறுத்ததாக கூறப்படுகிறது. அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதன் பின்னணியில், ஈராக்கில் இருந்து கூலிப்படையினரை ஈரான் அரசு வரவழைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. SHAIB மற்றும் ZURBATIYA எல்லைப் பகுதிகள் வழியாக, யாத்ரீகர்கள் போல வேடமிட்டு சுமார் ஐந்தாயிரம் பேர் ஈரானுக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் கடுமையான பழமைவாதத்தை பின்பற்றும் ஷியா முஸ்லிம்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ஆன்மிக பயணம்” என்ற பெயரில் சந்தேகம்
ஆன்மிக யாத்திரை என்ற பெயரில் வந்ததாக கூறப்படும் இந்தக் குழுவில் முதியவர்களோ, குழந்தைகளோ இல்லாதது சந்தேகத்தை அதிகரிப்பதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். 60 பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட இந்த கூலிப்படையினர், ஈரானின் 31 மாகாணங்களாகப் பிரித்து அனுப்பப்பட்டதாகவும், 600க்கும் மேற்பட்ட இடங்களில் தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.
உயிரிழப்புகள் – சர்வதேச கவலை
இந்த அடக்குமுறையில் மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரான் வீதிகளில் ரத்தம் சிந்தியதாகவும், பிணவறைகளில் உடல்கள் குவிந்துள்ளதாகவும் வெளியான தகவல்கள் உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வர அஞ்சும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அரசியல் குற்றச்சாட்டுகள்
இந்த மக்கள் புரட்சியின் பின்னால் அமெரிக்கா இருப்பதாக ஈரான் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதிலடியாக அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். மறுபுறம், முன்னாள் மன்னர் ஷா-வின் மகன் ரெசா பஹ்லவி, மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, “இந்த ஆட்சி வீழும் நேரம் நெருங்கிவிட்டது” என வீடியோ வெளியிட்டுள்ளார்.
மனிதத்தன்மை கேள்விக்குறி
கூலிப்படைகளை பயன்படுத்தி சொந்த நாட்டு மக்களை ஒடுக்குவது, ஒரு அரசால் மேற்கொள்ளப்படும் மனிதத்தன்மையற்ற செயல் என உலகம் முழுவதும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அரசியல் அதிகாரப் போராட்டங்களின் நடுவே சிக்கி தவிப்பது சாதாரண ஈரான் மக்கள் என்பதே இன்றைய நிலையின் கொடூரமான உண்மை.