இஸ்ரேலுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரிக்கை
மத்திய கிழக்கு பகுதியில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு, இந்திய குடிமக்கள் இஸ்ரேலுக்கு அவசியமில்லாத பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், தற்போது இஸ்ரேலில் வசித்து வரும் அனைத்து இந்தியர்களும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இஸ்ரேல் அரசு மற்றும் அந்நாட்டு உள்நாட்டுப் பாதுகாப்பு அமைப்புகள் வெளியிடும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள், வழிகாட்டுதல்கள் மற்றும் நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தற்போதைய சூழ்நிலை சீரடையும் வரை, இந்தியர்கள் இஸ்ரேலுக்கான அத்தியாவசியமற்ற பயணங்களை ஒத்திவைப்பது நல்லது என்றும், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் அருகிலுள்ள இந்தியத் தூதரகத்தை உடனடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.