சீனாவில் வைரலாகும் “Are You Dead?” ஐபோன் செயலி
சீனாவில் தனித்து வாழும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட “Are You Dead?” என்ற பெயருடைய ஐபோன் செயலி, அந்நாட்டின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் அதிகம் பதிவிறக்கம் செய்யப்படும் செயலியாக முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
தனியாக வசிக்கும் நபர்களின் நலன் மற்றும் பாதுகாப்பை மையமாகக் கொண்டு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர் ஒருவர் தொடர்ந்து இரண்டு நாட்கள் செயலியில் செக்-இன் செய்யவில்லை என்றால், ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டிருக்கலாம் என்பதை கணித்து, அவர் முன்கூட்டியே பதிவு செய்திருக்கும் நெருங்கிய உறவினர் அல்லது நண்பர்களுக்கு தானாகவே எச்சரிக்கை தகவலை அனுப்பும் வசதி இதில் உள்ளது.
‘மூன்ஸ்கேப் டெக்னாலஜிஸ்’ நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட இந்த செயலி, 2025 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெளியிடப்பட்டது. தற்போது 12,400-க்கும் அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், “Are You Dead?” என்ற பெயர் பயனர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, செயலியின் பெயரை “Are You Okay?” (நீ நலமாக இருக்கிறாயா?) அல்லது “Are You Alive?” (நீ உயிருடன் இருக்கிறாயா?) என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கைகள் சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளன.