உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்துள்ளேன் – பொங்கல் விழாவில் பிரதமர் மோடி உரை
பொங்கல் பண்டிகை இன்று சர்வதேச திருவிழாவாக கொண்டாடப்படுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெற்ற பாரம்பரிய பொங்கல் விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டு தமிழர்களுடன் இணைந்து பொங்கல் கொண்டாடினார்.
இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமிழ் மக்களுடன் இணைந்து பொங்கல் திருநாளை கொண்டாடுவது தனக்கு பெருமையும், மகிழ்ச்சியும் அளிப்பதாக தெரிவித்தார். உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் தங்களது பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியத்தை காத்து வருவதாக கூறிய அவர், உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை தான் சம்பாதித்து இருப்பதாக பெருமையுடன் குறிப்பிட்டார்.
மேலும் பேசிய பிரதமர், உழைப்புக்கும் இயற்கைக்கும் இடையிலான ஆழமான உறவை பொங்கல் பண்டிகை நினைவூட்டுவதாக கூறினார். விவசாயிகளின் உழைப்பை போற்றும் இந்த திருவிழா, இந்தியாவின் கலாச்சார வேர்களை உலகிற்கு எடுத்துச் சொல்லும் ஒரு உன்னதமான பண்டிகையாக திகழ்வதாகவும் அவர் தெரிவித்தார்.
பொங்கல் பண்டிகை இன்று இந்தியாவின் எல்லைகளைத் தாண்டி, உலகம் முழுவதும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுவது இந்த திருவிழா சர்வதேச அடையாளத்தை பெற்றிருப்பதற்கான சான்று என பிரதமர் மோடி கூறினார். இது தமிழர்களின் பண்பாட்டு பெருமையையும், இந்தியாவின் கலாச்சார பல்வகைத் தன்மையையும் வெளிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசத்தை கட்டமைப்பதில் விவசாயிகளின் பங்கு மிக முக்கியமானது என வலியுறுத்திய பிரதமர், விவசாயிகளின் உழைப்பே நாட்டின் பொருளாதாரத்திற்கும், உணவு பாதுகாப்பிற்கும் அடித்தளமாக இருப்பதாக தெரிவித்தார். தற்சார்பு இந்தியா இயக்கம், விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பின் மூலம் மேலும் வலிமை பெறுவதாகவும் அவர் கூறினார்.
தமிழ் மொழியின் தொன்மை, தமிழர்களின் உலகளாவிய பங்களிப்பு மற்றும் விவசாய பண்பாட்டின் மேன்மையை புகழ்ந்த பிரதமர் மோடியின் உரை, விழாவில் பங்கேற்றவர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்த பொங்கல் விழா, தமிழ் பண்பாட்டுக்கும் தேசிய ஒற்றுமைக்கும் இடையிலான உறவை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக அமைந்தது.