“பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான நட்பு உண்மையானது”
– இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உறுதி
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கு இடையிலான நட்பு வெறும் அரசியல் மரியாதை அல்ல; அது உண்மையான, ஆழமான நட்பாகும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்தார். இரு தலைவர்களுக்கும் இடையே நிலவும் உறவு இரு நாடுகளின் உறவுகளை மேலும் வலுப்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செர்ஜியோ கோர், பிரதமர் மோடி மற்றும் அதிபர் டிரம்ப் ஆகியோரின் தனிப்பட்ட நட்பு, இந்தியா–அமெரிக்கா உறவுகளுக்கு புதிய உயரத்தை வழங்கியுள்ளதாக குறிப்பிட்டார். நண்பர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயல்பானதே என்றும், ஆனால் அதனால் நட்பு அல்லது உறவுகள் பாதிக்கப்படுவதில்லை என்றும் அவர் விளக்கினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு மிகவும் நெருக்கமான அதிகாரியாக அறியப்படும் செர்ஜியோ கோர், முன்னதாக வெள்ளை மாளிகையில் அதிபரின் தனி இயக்குநராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவுக்கான அமெரிக்க தூதராக பொறுப்பேற்றார். பதவியேற்ற சில நாட்களில் அதிகாரப்பூர்வ பணிகள் காரணமாக அமெரிக்கா திரும்பிய அவர், தற்போது மீண்டும் இந்தியாவுக்கு வந்துள்ளார்.
இந்தியாவுக்கு மீண்டும் வந்த பின்னர், இரு நாடுகளுக்கிடையிலான முக்கிய விவகாரங்கள் குறித்து அதிகாரிகள் மற்றும் தூதரக வட்டாரங்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார். குறிப்பாக, இந்தியா – அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கும் பயனளிக்கும் வகையில் அமையும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
மேலும், அமெரிக்காவிற்கு இந்தியாவை விட அத்தியாவசியமான கூட்டாளி வேறு எந்த நாடும் இல்லை என வலியுறுத்திய செர்ஜியோ கோர், இது உலகின் பழமையான ஜனநாயகமான அமெரிக்காவுக்கும், உலகின் மிகப்பெரிய ஜனநாயகமான இந்தியாவுக்கும் இடையிலான ஒரு வரலாற்றுச் சங்கமம் எனவும் குறிப்பிட்டார். பாதுகாப்பு, பொருளாதாரம், தொழில்நுட்பம், வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு நாளுக்கு நாள் வலுப்பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் மோடி – அதிபர் டிரம்ப் இடையிலான நெருக்கமான உறவு, இந்தியா–அமெரிக்கா நட்புறவின் அடித்தளமாக இருந்து, எதிர்காலத்தில் மேலும் பல புதிய ஒப்பந்தங்களுக்கும், கூட்டணிகளுக்கும் வழிவகுக்கும் என அரசியல் மற்றும் தூதரக வட்டாரங்கள் கருதுகின்றன.