ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – ஈரானில் போராட்டங்களை கட்டுப்படுத்த கமேனி அரசின் டிஜிட்டல் போர்!
வெளிநாட்டு சதிகளின் துணையுடன் ஈரான் முழுவதும் தொடரும் மக்கள் எழுச்சி போராட்டங்களில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் வழங்கிய ஸ்டார்லிங் இணைய சேவை முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில், அதிநவீன ராணுவ தர ஜாமிங் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஸ்டார்லிங் இணைய சேவையை ஈரான் அரசு முற்றாக துண்டித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தலைநகர் டெஹ்ரான் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் வீதிகளில் குவிந்த மக்கள், அரசுக்கு எதிராக உயர்த்திய போர்க்கொடியை கீழிறக்க மறுத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 18 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் இந்த மக்கள் போராட்டம், ஈரான் அரசின் அடித்தளத்தையே உலுக்கும் அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
கடும் பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை, தனிமனித சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்திரம் பறிப்பு உள்ளிட்ட காரணங்களால், ஈரானின் எட்டுத் திசைகளிலும் போராட்டங்கள் காட்டுத்தீ போல பரவி வருகின்றன. இதனுடன் அமெரிக்காவின் அரசியல் தலையீடும், ஸ்டார்லிங் இணைய சேவையும் சேர்ந்து, போராட்டத் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல செயல்பட்டதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த போராட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஈரான் அரசு, கடுமையான அடக்குமுறைகளை கையாளத் தொடங்கியுள்ளது. பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூடு மற்றும் வன்முறை நடவடிக்கைகளில் இதுவரை 500-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம்சாட்டுகின்றன.
போராட்டத்தின் 12-வது நாளில், ஈரான் அரசு நாடு முழுவதும் இணைய சேவைகளை முற்றாக துண்டித்தது. இதன் விளைவாக, சுமார் 8 கோடி மக்கள் டிஜிட்டல் சேவைகள் இல்லாமல் தகவல் இருளில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. ஆனாலும், எலான் மஸ்க் வழங்கிய ஸ்டார்லிங் செயற்கைக்கோள் இணைய சேவை, அரசின் இணைய முடக்கத்தையும் மீறி செயல்பட்டு, போராட்டங்கள் மீண்டும் உச்சத்தை எட்ட வழிவகுத்தது.
இந்த சூழ்நிலையில், ஸ்டார்லிங் சேவையின் ‘உயிர்நாடியை’ முடக்கும் வகையில், ஈரான் அரசு ராணுவ தரமான ‘கில் ஸ்விட்ச்’ (Kill Switch) தொழில்நுட்பத்தை பயன்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் சுமார் 5,000 கிலோ மீட்டர் பரப்பளவில் ஸ்டார்லிங் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகுந்த செலவையும், அதிநவீன தொழில்நுட்பத்தையும் தேவைப்படுத்தும் இந்த நடவடிக்கையின் மூலம், ஈரான் அரசு மீண்டும் 8 கோடி மக்களை டிஜிட்டல் இருளில் மூழ்கடித்துள்ளது.
இந்த ஜாமிங் நடவடிக்கைக்கான தொழில்நுட்ப உதவியை ரஷ்யா அல்லது சீனா வழங்கியிருக்கலாம் என பாதுகாப்பு நிபுணர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். முந்தைய போராட்டங்களின்போது எதிர்ப்பாளர்கள் ஸ்டார்லிங் சேவையை பயன்படுத்திய அனுபவத்தை கருத்தில் கொண்டு, ஈரான் தனது சொந்த மின்னணு போர் தொழில்நுட்பம் அல்லது சீனா, ரஷ்யாவிடமிருந்து பெற்ற ஜாமர் தொழில்நுட்பத்தை பயன்படுத்தியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
2014 முதல் ரஷ்யா தனது ராணுவ நடவடிக்கைகளில், குறிப்பாக உக்ரைன் போர் களத்தில், ஜிபிஎஸ் ஜாமிங் தொழில்நுட்பத்தை விரிவாக பயன்படுத்தி வருகிறது. 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது மேற்கொண்ட படையெடுப்பின் போது, அமெரிக்கா வழங்கிய ஜிபிஎஸ் மற்றும் ஸ்டார்லிங் இணைக்கப்பட்ட அமைப்புகளையும் ரஷ்ய ஜாமர்கள் சீர்குலைத்ததாக ஸ்பேஸ் டாட் காம் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், போலந்து, எஸ்டோனியா போன்ற நேட்டோ நாடுகளிலும் விமான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதேபோல், சீனாவும் மின்னணு போர் உருவகப்படுத்தல்களில் தனது திறனை நிரூபித்துள்ளது. ட்ரோன் திரள்களை பயன்படுத்தி, தைவான் அளவிலான பகுதிகளில் ஸ்டார்லிங் சேவைக்கு இடையூறு ஏற்படுத்தும் பயிற்சிகளை சீனா மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பெய்டூ (BeiDou) செயற்கைக்கோள் அமைப்பின் மூலம் ஜிபிஎஸ் எதிர்ப்பு தொழில்நுட்பங்களில் சீனா பெருமளவில் முதலீடு செய்துள்ளதாக தி எகனாமிஸ்ட் மற்றும் ஜேம்ஸ்டவுன் அறக்கட்டளை அறிக்கைகள் சுட்டிக்காட்டுகின்றன.
ஸ்டார்லிங் என்பது குறைந்த பூமி சுற்றுப்பாதையில் இயங்கும் செயற்கைக்கோள்களின் வலையமைப்பை பயன்படுத்தி இணைய சேவை வழங்கும் தொழில்நுட்பமாகும். வழக்கமான செயற்கைக்கோள்களை விட மிகவும் குறைந்த உயரத்தில் இயங்குவதால், தரவுப் பரிமாற்ற வேகம் அதிகரித்து, தாமதம் குறைகிறது. உள்ளூர் தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை சார்ந்திராத இந்த சேவை, அரசு இணைய முடக்கம் விதித்தாலும் செயல்படக் கூடியதாக கருதப்படுகிறது.
இந்தச் சூழலில், ஈரானில் ஸ்டார்லிங் இணைய சேவை முடக்கப்பட்டதற்கு சீனா அல்லது ரஷ்யாவின் மறைமுக உதவி இருக்கலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர். இது போராட்டங்களை தற்காலிகமாக கட்டுப்படுத்தினாலும், அரசின் மீதான மக்களின் நம்பிக்கை மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகளே இந்த எழுச்சியை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வரும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.