ஜப்பான் வாள்போர்க் கலையான கென்ஜுட்சுவில் தேர்ச்சி பெற்ற பவன் கல்யாண்
ஜப்பானிய பாரம்பரிய வாள்போர்க் கலையான கென்ஜுட்சுவில் நிபுணத்துவம் பெற்றுள்ள ஆந்திரப் பிரதேச துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்கு, தற்காப்புக் கலைகளின் புலி என்ற சிறப்பு பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தாக்குதல் முறைகளும், தற்காப்புத் திறன்களும் ஒருங்கிணைந்த கலை வடிவமாகக் கருதப்படும் கென்ஜுட்சுவை, நடிகரும் அரசியல்வாதியுமான பவன் கல்யாண் நீண்ட ஆண்டுகளாக பயிற்சி செய்து வந்தார்.
இந்தக் கலையில், ஜப்பானிய தற்காப்புக் கலைகளில் தேர்ந்த பேராசிரியர் டாக்டர் சித்திக் மஹ்மூடி அவருக்கு வழிகாட்டியாக இருந்து பயிற்சி அளித்தார். இதன் தொடர்ச்சியாக, கோல்டன் டிராகன்ஸ் என்ற அமைப்பு, கென்ஜுட்சுவில் சிறப்பாக தேர்ச்சி பெற்றதற்காக பவன் கல்யாணுக்கு தற்காப்புக் கலைகளின் புலி என்ற மரியாதைப் பட்டத்தை வழங்கியுள்ளது.
மூன்று தசாப்தங்களுக்கு மேலாக கராத்தேவுடன் இணைந்து கென்ஜுட்சு பயிற்சியையும் மேற்கொண்டு வந்த பவன் கல்யாண், கடுமையான ஒழுக்கமும் தொடர் முயற்சியுமே இந்த சாதனைக்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
மேலும், ஜப்பானிய பயிற்சியாளர்கள் அல்லாதவர்களில், புகழ்பெற்ற டகேடா ஷிங்கன் வம்ச மரபில் சேர்க்கப்பட்ட முதல் தெலுங்கு மொழிப் பேசும் நபராகவும் பவன் கல்யாண் இடம்பிடித்துள்ளார்.
ஜப்பானிய வாள்போரின் நவீன வடிவமான கெண்டோ கலையிலும் உயர்ந்த தரத்திலான தேர்ச்சியைப் பெற்று பட்டம் வென்றுள்ள பவன் கல்யாணுக்கு, பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துவருகின்றனர்.