உலக மக்களின் நலனுக்காக பிரிக்ஸ் நாடுகளின் வலிமையை ஒருங்கிணைக்க இந்தியா வழிநடத்தும் – ஜெய்சங்கர்
உலகளாவிய முன்னேற்றத்தை நோக்கி, பிரிக்ஸ் கூட்டமைப்பில் இடம்பெறும் நாடுகளின் திறன்களை ஒருசேர இணைக்கும் முயற்சியை இந்தியா தனது தலைமைத்துவத்தின் கீழ் முன்னெடுக்கவுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டிற்கான பிரிக்ஸ் கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, அதனை குறிக்கும் அதிகாரப்பூர்வ இணையதளமும் புதிய லோகோவும் டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்ற ஜெய்சங்கர், பின்னர் உரையாற்றும்போது, வளர்ச்சி பாதையில் இருக்கும் மற்றும் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் முக்கிய மேடையாக பிரிக்ஸ் அமைப்பு உருவெடுத்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
மக்கள் நலனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்தையும், நடைமுறை சார்ந்த கூட்டுப் பணிகளையும் ஊக்குவிப்பதே பிரிக்ஸ் கூட்டமைப்பின் பிரதான நோக்கம் எனவும் அவர் விளக்கினார்.