இலக்கை எட்டாத PSLV-C62: தொழில்நுட்ப குறைபாடா காரணம்?

Date:

இலக்கை எட்டாத PSLV-C62: தொழில்நுட்ப குறைபாடா காரணம்?

இந்த ஆண்டில் முதன்முறையாக இஸ்ரோ விண்ணில் ஏவிய PSLV-C62 ஏவுகணை, நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையை அடைய முடியாமல் வழிமாறி சென்றுள்ளது. திட்டமிட்ட இலக்கு ஏன் கைவரவில்லை என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. இதன் பின்னணியைப் பார்ப்போம்.

ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத்தில் இருந்து, PSLV-C62 ராக்கெட் மூலம் மொத்தம் 16 செயற்கைக்கோள்கள் விண்ணுக்கு அனுப்பப்பட்டன.

இந்த தொகுப்பில், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான DRDO உருவாக்கிய EOS-N1 எனப்படும் அதிநவீன கண்காணிப்பு செயற்கைக்கோளும் இடம்பெற்றிருந்தது. இந்த செயற்கைக்கோள், பூமியிலிருந்து 505 கிலோமீட்டர் உயரத்தில் உள்ள சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட வேண்டும் என திட்டமிடப்பட்டிருந்தது.

ஏவுதலின் ஆரம்ப கட்டங்கள் அனைத்தும் திட்டமிட்டபடியே நடந்தன. ராக்கெட் வெற்றிகரமாக புறப்பட்டு, அதன் துணை பூஸ்டர்களையும் சரியான நேரத்தில் பிரித்தது. ஆனால் மூன்றாவது கட்டத்தை எட்டியதும், இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தில் பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியது.

எதிர்பாராத விதமாக PSLV-C62 திசை மாறி சுழலத் தொடங்கியது. டெலிமெட்ரி திரைகளில் ராக்கெட் நிலைத்தன்மையை இழந்து, அதன் அச்சைச் சுற்றி பம்பரம் போல் சுழல்வது தெளிவாகக் காணப்பட்டது.

இதன் காரணமாக, ஏவப்பட்ட செயற்கைக்கோள்களை நிர்ணயிக்கப்பட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த முடியாமல், ராக்கெட் தனது வழித்தடத்திலிருந்து விலகிச் சென்றது.

இரண்டு திட எரிபொருள் நிலைகள் மற்றும் இரண்டு திரவ எரிபொருள் நிலைகள் என நான்கு கட்டங்களைக் கொண்ட PSLV-C62, மூன்றாவது கட்டத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் தேவையான சுற்றுப்பாதை வேகத்தை அடையத் தவறியதாக கூறப்படுகிறது.

இந்த ஏவுதலின் மூலம், இந்தியாவின் முதல் விண்வெளி எரிபொருள் நிரப்பு முயற்சியான ஆயுள்-சாட் செயற்கைக்கோளும், பாதுகாப்புத் துறையில் முக்கியமான “SUPER EYE” என அழைக்கப்படும் மேம்பட்ட கண்காணிப்பு செயற்கைக்கோளும் விண்ணில் அனுப்பப்பட்டிருந்தன.

இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவிக்கையில், ஏவுதலின் தொடக்கம் முதல் மூன்றாவது கட்டத்தின் இறுதி வரை ராக்கெட்டின் செயல்பாடு எதிர்பார்த்தபடியே இருந்ததாகவும், ஆனால் அந்த கட்டம் முடிவடையும் நேரத்தில் அதிகப்படியான அதிர்வுகள் பதிவாகியதாகவும் கூறினார். சம்பந்தப்பட்ட தரவுகள் தற்போது விரிவாக ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கியுள்ளார்.

இதற்கு முன்னர், கடந்த மே மாதத்தில் ஏவப்பட்ட PSLV-C61 திட்டமும் இயந்திரக் குறைபாடுகள் காரணமாக முழுமையான வெற்றியை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த நிகழ்விலும், போதிய அழுத்தம் இல்லாததால் தேவையான உந்துவிசையை இன்ஜின் வழங்க இயலாமல், சுற்றுப்பாதை வேகத்தை எட்ட முடியவில்லை என்பதே தோல்விக்கான காரணமாக கூறப்பட்டது.

தற்போது PSLV-C62 மூலம் அனுப்பப்பட்ட 16 செயற்கைக்கோள்களும் விண்வெளியில் கட்டுப்பாடின்றி சுழன்று வருவதாகவும், எதிர்காலத்தில் அவை பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, விண்கற்களைப் போல எரிந்து அழியக்கூடும் எனவும் விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானியும் சூரிய மின்தகடு நிபுணருமான மனிஷ் புரோகித், “விண்வெளி ஆராய்ச்சியில் பின்னடைவுகள் இயல்பானவை. ஆனால் அவற்றிலிருந்து எவ்வளவு விரைவாகவும் அறிவார்ந்த முறையிலும் மீண்டு வருகிறோம் என்பதே உண்மையான வெற்றியின் அளவுகோல்” என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் – அண்ணாமலை கோரிக்கை

கைது செய்யப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் சங்கப் பொறுப்பாளர்கள் அனைவரையும் உடனடியாக விடுதலை...

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள்

பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுகோள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில்...

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட நபர் படுகொலை

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் பரபரப்பு: காதலியை சந்திக்க வந்த குற்றப்பின்னணி கொண்ட...

ராமர் ஆலயம் சுற்றியுள்ள 15 கி.மீ. எல்லையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு

ராமர் ஆலயம் சுற்றியுள்ள 15 கி.மீ. எல்லையில் அசைவ உணவுக்கு கட்டுப்பாடு அயோத்தியில்...