‘டியூட்’ படத்தில் இளையராஜா பாடல்கள்: தனியாக வழக்கு தொடர உயர் நீதிமன்றம் அனுமதி
சமீபத்தில் வெளியான ‘டியூட்’ திரைப்படத்தில், இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில், தனியாக வழக்கு தொடரலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இளையராஜா, தன் இசைப்பாடல்களின் பதிப்புரிமையை மீறி, அவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருவாய் ஈட்டிவருவதாகக் குற்றம்சாட்டி, சோனி மியூசிக், எக்கோ ரெக்கார்டிங் மற்றும் அமெரிக்காவின் ஓரியண்டல் ரெக்கார்ட்ஸ் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருந்தார்.
முன்னதாக, இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தி ஈட்டிய வருவாய் விவரங்களை தாக்கல் செய்யுமாறு சோனி மியூசிக் நிறுவனத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், வழக்கு நேற்று நீதிபதி என். செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் வழக்கறிஞர் ஏ. சரவணன்,
“சோனி நிறுவனம் இன்னும் பதில்மனு தாக்கல் செய்யவில்லை. மேலும், ‘டியூட்’ படத்திலும் இளையராஜாவின் இரண்டு பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ளன,”
என்று வாதித்தார்.
இதற்கு சோனி நிறுவனம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண்,
“இளையராஜா பாடல்களால் கிடைத்த வருவாய் விவரங்களை சீல் செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்துள்ளோம்; பதில்மனுவும் தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்,”
என்று தெரிவித்தார்.
அதற்குப் பதிலளித்த நீதிபதி,
“உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே வருமான விவரங்களை சீல் செய்யப்பட்ட கவரில் தாக்கல் செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளது,”
என்று கூறி, சோனி நிறுவனம் தாக்கல் செய்த ஆவணங்களைத் திருப்பி அனுப்பினார்.
மேலும், ‘டியூட்’ படத்தில் பாடல் பயன்பாடு குறித்து இளையராஜா தனியாக வழக்கு தொடர அனுமதி வழங்கினார். சோனி நிறுவனம் தொடர்ந்துள்ள வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாக கூறி, இந்த வழக்கு விசாரணையை நவம்பர் 19-ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.