கிரீன்லாந்து மீது ரஷ்யா, சீனா கை வைக்க வாய்ப்பு – டிரம்ப் எச்சரிக்கை
கிரீன்லாந்து மீது ரஷ்யா அல்லது சீனா போன்ற நாடுகள் ஆதிக்கம் செலுத்தக்கூடும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.
வெனிசுலாவிலிருந்து அமெரிக்காவுக்கு போதைப்பொருட்கள் சட்டவிரோதமாக கடத்தப்படுகின்றன என்று டிரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்த நிலையில், சமீபத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் கைது செய்ததாக தகவல் வெளியானது. அதன் பின்னரே, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதே டிரம்பின் உண்மையான நோக்கம் என்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த சூழலில், கிரீன்லாந்தில் உள்ள மதிப்புமிக்க கனிம வளங்கள் மீது கவனம் செலுத்திய டிரம்ப், தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி டென்மார்க்கிடமிருந்து அந்த தீவை கைப்பற்றத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு டென்மார்க் அரசு கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியதுடன், இத்தகைய நடவடிக்கை நேட்டோ கூட்டமைப்பில் பிளவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்தது.
இந்நிலையில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், கிரீன்லாந்து விவகாரத்தில் அங்கு உள்ளவர்கள் சம்மதித்தாலும் இல்லையெனினும், அமெரிக்கா தன்னிச்சையாக முடிவெடுக்கும் என்று கூறினார்.
மேலும், அமெரிக்கா நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தப் பகுதிக்கு ரஷ்யா அல்லது சீனா உடனடியாக கால் பதிக்கும் அபாயம் இருப்பதாகவும், ரஷ்யா அல்லது சீனாவை அண்டை நாடுகளாகக் கொண்ட நிலைமை அமெரிக்காவுக்கு வேண்டாம் என்றும் டிரம்ப் தெரிவித்தார்.