பத்லாபூர் ரயில் நிலையத்தில் ஒழுங்காக வரிசையில் நின்று ரயிலில் ஏறிய பயணிகள்
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள பத்லாபூர் ரயில் நிலையத்தில், பயணிகள் ஒழுங்காக வரிசையில் நின்று ரயிலில் ஏறும் காட்சி வெளியாகி, பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
மும்பை புறநகர் ரயில்கள் என்றாலே கடும் கூட்டம் நினைவிற்கு வரும். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் ரயிலில் ஏறுவதும் இறங்குவதும் பயணிகளுக்கு மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. அளவுக்கு அதிகமான நெரிசல் காரணமாக, ஒவ்வோர் ஆண்டும் 2,000-க்கும் மேற்பட்டோர் ரயிலிலிருந்து தவறி விழுந்து உயிரிழப்பதாக பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலைமையை மாற்ற மத்திய ரயில்வே நிர்வாகம் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், கூட்ட நெரிசல் முழுமையாக குறையவில்லை. இத்தகைய சூழலில், பத்லாபூர் ரயில் நிலையத்தில் பயணிகள் தள்ளுமுள்ளின்றி அமைதியாக வரிசையில் நின்று ரயிலில் ஏறும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவத் தொடங்கியுள்ளது.
ஒருவரை ஒருவர் தள்ளிக்கொள்ளாமல், ஒழுங்குடன் பயணிகள் காத்திருப்பதை பார்த்த நெட்டிசன்கள், “இது உண்மையா?” “கனவா அல்லது நிஜமா?” என வியப்புடன் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் சிலர், இந்தக் காட்சியை நம்ப மறுத்து, இது செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவாக இருக்கலாம் என சந்தேகம் தெரிவித்தும் வருகின்றனர்.