ஜனவரி 29 முதல் கராச்சி – டாக்கா நேரடி விமான சேவை: இந்தியாவின் அனுமதி கேள்விக்குறி
இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஒன்றிணைந்து வருவதாகக் கருதப்படும் சூழலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு கராச்சி – டாக்கா இடையே மீண்டும் நேரடி விமான சேவை தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானங்கள் இந்திய வான்வெளி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுமா என்பதே தற்போது எழுந்துள்ள முக்கிய விவாதமாக உள்ளது.
2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் வங்கதேசத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தைத் தொடர்ந்து, முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி நீக்கம் செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு பொறுப்பேற்றது. இந்த புதிய அரசு, இந்தியாவுக்கு எதிரான அணுகுமுறையைக் கடைப்பிடித்து, இந்தியா–வங்கதேச உறவுகளில் கடும் பதற்றத்தை உருவாக்கியது.
ஷேக் ஹசீனாவுக்கு இந்தியா பாதுகாப்பு வழங்கியதைக் காரணமாகக் கொண்டு, முகமது யூனுஸ் தலைமையிலான நிர்வாகம் இந்தியாவை குறிவைத்து பல்வேறு தூண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பாகிஸ்தானுடன் நெருக்கமான அரசியல், ராணுவ மற்றும் வர்த்தக உறவுகளை வங்கதேசம் வளர்த்துக் கொண்டது. அண்மையில், பாகிஸ்தான் சென்ற வங்கதேச விமானப்படை தளபதி ஹசன் முகமது கான், அந்நாட்டு ராணுவத் தலைவர் அசிம் முனீரை சந்தித்து இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பை உறுதிப்படுத்தினார்.
குறிப்பாக சீனா–பாகிஸ்தான் இணைந்து தயாரித்த JF-17 போர் விமானங்களில் வங்கதேசம் அதிக ஆர்வம் காட்டியது. மேலும், ‘அமன்–25’ கடற்படை பயிற்சிகளில் இரு நாடுகளும் இணைந்து பங்கேற்றன. 1971-க்கு பிறகு முதன்முறையாக பாகிஸ்தான் – வங்கதேசம் இடையே நேரடி கடல் வர்த்தகமும் மீண்டும் தொடங்கியது. மோங்லா துறைமுகத்தில் பாகிஸ்தான் கப்பல்களுக்கு வங்கதேசம் கூடுதல் சலுகைகளையும் வழங்கியது. பாகிஸ்தானியர்களுக்கு விசா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டன.
இந்தச் சூழலில், வங்கதேசத்தின் தேசிய விமான நிறுவனமான பிமான் பங்களாதேஷ், ஜனவரி 29 முதல் கராச்சி – டாக்கா இடையே நேரடி விமான சேவையைத் தொடங்குவதாக அறிவித்துள்ளது. ஆரம்ப கட்டமாக, வாரத்தில் இரண்டு நாட்கள், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் விமானங்கள் இயக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பாகிஸ்தானின் தனியார் விமான நிறுவனமான ‘ஃப்ளை ஜின்னா’ நிறுவனத்துக்கும் இந்த வழித்தடத்தில் சேவை நடத்த வங்கதேசம் அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், விமானங்கள் எந்த பாதையில் பயணம் செய்யும் என்பது குறித்த விவரம் வெளியிடப்படவில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் தங்களது வான்வெளியைப் பயன்படுத்தத் தடைவிதித்துள்ள நிலையில், இந்தியா – வங்கதேச உறவும் தற்போது சீரான நிலையில் இல்லை. இதனால் கராச்சி – டாக்கா விமானங்கள் இந்திய வான்வெளி வழியாகச் செல்ல அனுமதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய அனுமதி மறுக்கப்பட்டால், விமானங்கள் இந்திய துணைக்கண்டத்தைச் சுற்றி நீண்ட மாற்றுப் பாதையில் பயணிக்க வேண்டிய சூழல் ஏற்படும். இதனால், 2,300 கிலோமீட்டர் தூரமாக உள்ள நேரடி பயணம், 5,800 கிலோமீட்டருக்கும் அதிகமாகி, பயண நேரம் மூன்று மணி நேரத்திலிருந்து எட்டு மணி நேரமாக உயரக்கூடும்.
இதன் விளைவாக பயணக் கட்டணங்களும் கடுமையாக உயரும். நேரடி பாதையில் பயணிக்க 340 முதல் 420 அமெரிக்க டாலர்கள் வரை செலவாகும் நிலையில், மாற்றுப் பாதை பயன்படுத்தப்பட்டால் எரிபொருள் செலவுகள் காரணமாக கட்டணம் 640 முதல் 720 டாலர்கள் அல்லது அதற்கு மேலும் உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. ஏற்கனவே நடைமுறையில் உள்ள ஒப்பந்தங்களின் அடிப்படையில் கராச்சி – டாக்கா விமான சேவை தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1978 ஆம் ஆண்டு இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே கையெழுத்தான இருதரப்பு விமான ஒப்பந்தம், விமானப் பயண உரிமைகள், வழித்தடங்கள் மற்றும் அவற்றை இடைநிறுத்தும் அதிகாரங்களை இந்தியாவுக்கு வழங்குகிறது. அந்த ஒப்பந்தத்தின் படி, இந்திய வான்வெளியை பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்படுவதோடு, தேவையெனில் ஆலோசனைகளுக்குப் பிறகு அந்த உரிமைகளை இடைநிறுத்தவும் இந்தியாவுக்கு அதிகாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.