பெரிய வழிப்பாதையில் சென்ற ஐயப்ப பக்தர்கள் தடுத்து நிறுத்தம் – போலீசாருடன் வாக்குவாதம்
சபரிமலைக்கு பெரிய வழிப்பாதை வழியாக சென்ற ஐயப்ப பக்தர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மகர விளக்கு பூஜையையொட்டி கடந்த 31ஆம் தேதி சபரிமலை நடை திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் பம்பை பாதை, புல்மேடு பாதை மற்றும் எருமேலியில் இருந்து தொடங்கும் பெரிய வழிப்பாதை என பல வழிகளில் தினமும் சபரிமலை நோக்கி பயணித்து வருகின்றனர்.
இந்நிலையில், எருமேலியில் இருந்து பெரிய வழிப்பாதை வழியாக வந்துகொண்டிருந்த பக்தர்களை அழுதா நதிக்கரையில் வனத்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் இணைந்து தடுத்து நிறுத்தினர்.
இன்று தரிசனத்திற்கு முன்பதிவு செய்துள்ள பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்படும் என்றும், 11ஆம் தேதிக்கான தரிசனப் பதிவு செய்தவர்கள் நாளை மட்டுமே செல்ல முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதனால் அதிருப்தியடைந்த பக்தர்கள் காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தினர்.