ட்ரம்பின் விரிவாக்க வேட்கை – வெனிசுலாவுக்குப் பின் குறிவைக்கப்படும் நாடுகள் | சிறப்பு அலசல்
வெனிசுலா எல்லைக்குள் நுழைந்து, அந்த நாட்டின் அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவி சிலியா புளோரஸையும் கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு சென்ற அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இனி மேலும் பல லத்தீன் அமெரிக்க நாடுகளை ராணுவ சக்தியால் கைப்பற்ற திட்டமிட்டுள்ளதாக வெளிவரும் தகவல்கள் உலக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன.
இதற்கு முன், 1989ஆம் ஆண்டு “ஆபரேஷன் ஜஸ்ட் காஸ்” என்ற பெயரில் பனாமாவிற்குள் படையெடுத்த அமெரிக்கா, அந்நாட்டின் அதிபராக இருந்த மானுவல் நோரியேகாவை கைது செய்து அதிகார மாற்றத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு, வேறு ஒரு நாட்டிற்குள் ராணுவமாக புகுந்து, அந்நாட்டின் தலைவரை கைது செய்து, தன் ஆதரவாளர்களைக் கொண்டு அரசு அமைப்பது என்பது 1823ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் மன்றோ முன்வைத்த கொள்கையின் ஒரு பகுதியாகும். இதுவே “மன்றோ கொள்கை” என அழைக்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு அமெரிக்க கண்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் செல்வாக்குப் பகுதி என்ற அடிப்படையிலேயே இந்தக் கோட்பாடு உருவானது.
“அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே” என்ற மன்றோவின் கொள்கைக்கு புதிய வடிவம் கொடுத்து, அதையே அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு வழிகாட்டியாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
இந்தக் கொள்கையின் பெயரிலேயே, சர்வதேச சட்டங்களைப் பொருட்படுத்தாமல், வடக்கு, தெற்கு மற்றும் மத்திய அமெரிக்க நாடுகளில் மேற்கொள்ளப்படும் ராணுவ நடவடிக்கைகளை அமெரிக்கா நியாயப்படுத்தி வருகிறது.
லத்தீன் அமெரிக்க நாடுகளின் அரசியல் எதிர்காலத்தை, தன் விருப்பப்படி ராணுவ சக்தியால் தீர்மானிக்க அமெரிக்கா தயாராக இருப்பதற்கான சமீபத்திய உதாரணமாக வெனிசுலா சம்பவம் பார்க்கப்படுகிறது.
கொலம்பியாவின் இடதுசாரி ஜனாதிபதி குஸ்டாவோ பெட்ரோவை கடுமையாக விமர்சித்த ட்ரம்ப், “மோசமான ஒருவரின் ஆட்சிக்குள் அந்த நாடு சிக்கியுள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.
வெனிசுலா அதிபர் தம்பதியை கைது செய்து அமெரிக்காவுக்குக் கொண்டு வந்த பின்னர், அடுத்த கட்ட நடவடிக்கையாக மெக்சிகோ, கியூபா மற்றும் கொலம்பியா ஆகிய நாடுகள் தன் இலக்கில் இருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், கொலம்பியாவில் தயாரிக்கப்படும் கொக்கெய்ன் போதைப்பொருள் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் கடத்தப்படுவதாகவும், அதற்கு அந்நாட்டு அதிபர் பெட்ரோ பொறுப்பு எனவும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கு பதிலளித்த குஸ்டாவோ பெட்ரோ, வெனிசுலாவில் அமெரிக்கா மேற்கொண்ட நடவடிக்கை, லத்தீன் அமெரிக்க நாடுகளின் இறையாண்மைக்கு நேரிட்ட தாக்குதல் என்றும், இது பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், கியூபா கடுமையான பிரச்சனையை எதிர்கொள்ள நேரிடும் என அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மார்கோ ரூபியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வெனிசுலா அதிபர் மதுரோவுக்கு பாதுகாப்பளித்தது கியூபாதான் என குற்றம் சாட்டிய ரூபியோ, அமெரிக்க ராணுவ நடவடிக்கையிலிருந்து கியூபா தப்ப முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், கியூபாவை “தோல்வியடைந்த நாடு” என விமர்சித்த ட்ரம்ப், அந்நாட்டு மக்களுக்கு உதவுவதாகவும் கூறியிருந்தார்.
கியூபா அதிபர் மிகுவேல் டியாஸ்-கனெல், வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலை கடுமையாக கண்டிப்பதாகவும், அமெரிக்காவுக்கு எதிராக சர்வதேச அமைப்புகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “தாய்நாடு அல்லது மரணம்” என்ற முழக்கத்தையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, வெனிசுலா அதிபர் கைது செய்யப்பட்ட உடனேயே, ட்ரம்ப் நிர்வாகத்தின் முக்கிய அதிகாரியான ஸ்டீபன் மில்லரின் மனைவி கேட்டி மில்லர், “விரைவில்” என்ற தலைப்புடன், அமெரிக்கக் கொடியின் நிறங்களில் கிரீன்லாந்து வரைபடத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்தது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு பதிலளித்த அமெரிக்காவிலுள்ள டென்மார்க் தூதர் ஜெஸ்பர் மோலர் சோரன்சன், டென்மார்க்கின் ஒருமைப்பாட்டுக்கும் அதன் நில உரிமைக்கும் முழுமையான மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
மேலும், கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான மிரட்டல்களை ட்ரம்ப் உடனடியாக நிறுத்த வேண்டும் என்று டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் கோரிக்கை வைத்துள்ளார்.
கேட்டி மில்லரின் பதிவை அவமதிப்பானது என விமர்சித்துள்ள கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ்-ஃபிரடெரிக் நீல்சன், நாடுகளுக்கும் மக்களுக்கும் இடையிலான உறவுகள் பரஸ்பர மரியாதை மற்றும் சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலேயே அமைய வேண்டும் என்று தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.
மேலும், பீதி அடைய தேவையில்லை என்றும், கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்றும், ஒரு நாட்டின் எதிர்காலம் சமூக ஊடகப் பதிவுகளால் தீர்மானிக்கப்படாது என்றும் அவர் விளக்கினார்.
இதனிடையே, மெக்சிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம் நாட்டின் கட்டுப்பாட்டில் இல்லை என்றும், போதைப்பொருள் கும்பல்களே மெக்சிகோ அரசை இயக்குகின்றன என்றும் ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
பிற நாடுகளில் ராணுவ தலையீடுகள் மூலம் ஆட்சி மாற்றங்களை ஏற்படுத்தும் ட்ரம்பின் நடவடிக்கைகள், உலக அரசியலில் மிகப் பெரிய அபாயத்தை உருவாக்கும் என புவிசார் அரசியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.