டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பு எதிரொலி – உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்கா கைது செய்ததன் பின்னணியில், உலகளாவிய சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது.
அமெரிக்காவுக்கு போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு சுமத்தி, கடந்த 3ஆம் தேதி வெனிசுலாவில் அமெரிக்க ராணுவம் நடவடிக்கை மேற்கொண்டு, அந்நாட்டு அதிபர் நிகோலஸ் மதுரோவை கைது செய்தது. இதனைத் தொடர்ந்து அவர் தற்போது நியூயார்க் நகரில் உள்ள புரூக்ளின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவத்தின் தாக்கமாக, உலக சந்தையில் அமெரிக்க கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 56.96 டாலராக சரிந்தது. அதே நேரத்தில், சர்வதேச வர்த்தக தரமான பிரெண்ட் வகை கச்சா எண்ணெய் விலை 34 சென்ட் குறைந்து 60.41 டாலராக நிலைத்தது.
வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியில் அமெரிக்கா தலையிடும் என அதிபர் டிரம்ப் வெளியிட்ட அறிவிப்பால், கச்சா எண்ணெய் உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவானதாக கூறப்படுகிறது. இதன் விளைவாகவே சந்தையில் எண்ணெய் விலை சிறிய அளவில் சரிவை சந்தித்ததாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
டிரம்பின் இந்த அறிவிப்புகளைத் தொடர்ந்து, அமெரிக்க நிதி சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. அங்கு தங்கத்தின் விலை 2.70 சதவீதம் உயர்ந்துள்ளதுடன், வெள்ளியின் விலை 6.60 சதவீதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.