பல கோடி ஆண்டுகளாக நிலவை நோக்கி நகரும் நீர்துகள்கள்..!
பூமியின் வளிமண்டலத்தில் உள்ள நைட்ரஜன் மற்றும் நீர்துகள்கள் போன்ற சிறு அணுக்கள், பூமியின் காந்த சக்தியின் துணையுடன் பல கோடி ஆண்டுகளாக சந்திரனை நோக்கி பயணித்து வருவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பூமி மற்றும் சந்திரன் இடையிலான ஆழமான, சிக்கலான தொடர்புகள் குறித்து விஞ்ஞானிகள் நீண்ட காலமாக ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். நாம் இதுவரை கருதியதை விட, சந்திரனின் சூழலை உருவாக்குவதில் பூமி மிக முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், பூமியின் வளிமண்டலத்தில் காணப்படும் நைட்ரஜன் மற்றும் நீர்துகள்கள் போன்ற அணுக்கள், பூமியின் காந்தப்புலத்தின் வழியாக கோடிக்கணக்கான ஆண்டுகளாக நிலவிற்கு கடத்தப்பட்டு வருவதாக ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
சூரிய காற்றின் அழுத்தத்தால் நகர்த்தப்படும் இந்த அணுக்கள், விண்வெளியில் உருவாகும் ‘காந்த பாதை’ (Magnetic Highway) வழியாக நிலவின் மேற்பரப்பை அடைந்து அங்கே தங்கிக் கொள்கின்றன என்றும் விஞ்ஞானிகள் விளக்குகின்றனர். இத்துகள்களின் மூலம் சந்திரனில் நீர் மற்றும் ஆக்சிஜன் உருவாகும் வாய்ப்புகள் குறித்து தற்போது தீவிரமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.