அமெரிக்காவுக்கு வரி விதித்த இந்தியா – பருப்பு இறக்குமதியில் 30% வரி; அமெரிக்காவில் எதிர்வினை
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருப்பு வகைகள் மீது இந்தியா 30 சதவீத இறக்குமதி வரியை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எந்தப் பெரிய அறிவிப்பும் இன்றி அமைதியாக அமல்படுத்தப்பட்ட இந்த வரி, இரு நாடுகளுக்கிடையேயான வர்த்தக உறவுகளில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்க விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவலை தெரிவித்துள்ளனர். குறிப்பாக பருப்பு ஏற்றுமதியை பெரிதும் நம்பியுள்ள அமெரிக்க விவசாயிகளுக்கு இந்த வரி பெரும் இழப்பை ஏற்படுத்தும் என அவர்கள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க எம்.பிக்கள்,
“இந்தியாவின் இறக்குமதி வரி அமெரிக்க விவசாயிகளின் வாழ்வாதாரத்தை நேரடியாகப் பாதிக்கிறது. இதனால் பருப்பு ஏற்றுமதி குறையும் அபாயம் உள்ளது” என தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் நேரடியாகத் தலையிட்டு, இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இரு நாடுகளுக்கிடையே நீண்ட காலமாக நிலவி வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளில் இந்த புதிய வரி ஒரு முக்கிய விவகாரமாக மாறக்கூடும் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய தரப்பில், உள்நாட்டு விவசாயிகளை பாதுகாப்பது மற்றும் பருப்பு உற்பத்தியை ஊக்குவிப்பதே இந்த வரியின் முக்கிய நோக்கம் எனக் கூறப்படுகிறது. வெளிநாட்டு இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம், இந்திய விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைப்பதை உறுதி செய்யும் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இந்தியா–அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவுகள் எவ்வாறு நகரும் என்பதையும், இரு நாடுகளும் சமரச முடிவுக்கு வருமா என்பதையும் சர்வதேச பொருளாதார வட்டாரங்கள் கூர்ந்து கவனித்து வருகின்றன.