ஜப்பானை முந்தி உலகின் 4-வது பெரிய பொருளாதாரம் : இந்தியாவை பாராட்டிய சீனா
ஜப்பானை பின்னுக்குத் தள்ளி உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உயர்ந்துள்ள நிலையில், இந்த சாதனைக்கு சீனா பாராட்டு தெரிவித்துள்ளது. இது தொடர்பான விரிவான செய்தித் தொகுப்பை இப்போது பார்க்கலாம்.
இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக முன்னேறியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ பொருளாதார அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஆண்டு இறுதிப் பொருளாதார ஆய்வின் படி, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி தற்போது சுமார் 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளதாகவும், 2030 ஆம் ஆண்டுக்குள் இது 7.3 டிரில்லியன் டாலராக உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2028 ஆம் ஆண்டுக்குள்ளேயே ஜெர்மனியை முந்தி, இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உயரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதுடன், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்ட வரம்பிற்குள் இருப்பதாகவும் அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
இந்த நிலையில், உலக பொருளாதார மேடையில் புதிய சாதனையைப் படைத்துள்ள இந்தியாவுக்கு சீனா தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இந்தியாவில் உள்ள சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் யூ ஜிங், தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பதிவில், ஜப்பானை முந்தி இந்தியா உலகின் 4-வது பெரிய பொருளாதாரமாக உருவெடுத்துள்ளதை அறிந்து மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த காலத்தை நேர்மையாக எதிர்கொண்டு, அதிலிருந்து பாடம் கற்றுக் கொண்டு, எதிர்காலத்தை பொறுப்புடனும் தன்னம்பிக்கையுடனும் சந்திப்பதன் மூலம் தான் இந்த வலிமையான வளர்ச்சியை இந்தியா அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார வளர்ச்சி தரவுகளைப் பார்க்கும் போது, முந்தைய நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் 7.8 சதவீதமாக இருந்த வளர்ச்சி, 2020 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 7.4 சதவீதமாக பதிவானது. தற்போதைய நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இந்தியாவின் GDP வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
இது கடந்த ஆறு காலாண்டுகளில் பதிவான மிக உயர்ந்த வளர்ச்சி விகிதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும், பொறியியல் பொருட்கள், மின்னணு சாதனங்கள், மருந்துகள் மற்றும் பெட்ரோலிய தயாரிப்புகள் உள்ளிட்ட இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 38.13 பில்லியன் அமெரிக்க டாலராக பதிவாகியுள்ளது.
ஏற்றுமதி துறையின் முன்னேற்றம், உற்பத்தித் துறையின் வளர்ச்சி, சேவைத் துறையின் வலுவான பங்களிப்பு மற்றும் உள்நாட்டு நுகர்வு அதிகரிப்பு ஆகியவை இந்திய பொருளாதாரத்தை இந்த உயரத்திற்கு கொண்டு சென்ற முக்கிய காரணிகளாகக் கூறப்படுகின்றன.
குறிப்பாக தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் சேவைகள், கட்டுமானத் துறை, உள்கட்டமைப்பு வளர்ச்சி மற்றும் ‘மேக் இன் இந்தியா’ போன்ற திட்டங்கள் பொருளாதார வளர்ச்சிக்கு புதிய வேகத்தை வழங்கியுள்ளதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையை, அதிக வளர்ச்சியுடன் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரு சிறந்த சமநிலை காலகட்டம் என மத்திய அரசு “Goldilocks Moment” என்று வர்ணித்துள்ளது.
2047 ஆம் ஆண்டுக்குள் உயர் நடுத்தர வருமான நாடாக மாறும் இலக்கை நோக்கி, சீரான பொருளாதார வளர்ச்சி, நிலையான உள்கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மற்றும் அனைவரையும் உள்ளடக்கும் சமூக முன்னேற்றத்துடன் இந்தியா முன்னேறி வருகிறது.
இதே நேரத்தில், உலகின் நான்காவது பெரிய பொருளாதாரமாக இருந்தாலும், இந்தியா இன்னும் சில முக்கிய சவால்களை எதிர்கொள்கிறது என பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.
2024 ஆம் ஆண்டின் தரவுகளின்படி, இந்தியாவின் தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2,694 அமெரிக்க டாலருக்கும் குறைவாக உள்ளது. இது ஜப்பான் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது கணிசமாக குறைவாகவே உள்ளது.
140 கோடிக்கும் மேற்பட்ட மக்கள்தொகையில் பெரும்பாலானோர் இளைஞர்களாக இருப்பதால், அவர்களுக்கு தகுந்த மற்றும் நிலையான வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மிக முக்கியமான சவாலாகத் தொடர்கிறது.
உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகளுக்கு மத்தியில் இந்தியா தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்து வருவது ஒரு நல்ல முன்னேற்ற அறிகுறியாகவே பார்க்கப்படுகிறது.
மொத்தத்தில், “வளர்ந்து வரும் நாடு” என்ற அடையாளத்தைத் தாண்டி, “உலகத்தை வழிநடத்தும் சக்தி” என்ற புதிய அடையாளத்தை பிரதமர் மோடி தலைமையிலான இந்தியா உருவாக்கி வருவதாக அரசியல் மற்றும் பொருளாதார ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.