ஒரே சோதனையில் இரட்டை இலக்கு : பிரளய் ஏவுகணை சோதனை வெற்றியுடன் இந்தியா புதிய மைல்கல்
முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இரண்டு ‘பிரளய்’ ஏவுகணைகளை ஒரே நேரத்தில் வெற்றிகரமாக சோதனை செய்து இந்தியா முக்கியமான சாதனையை நிகழ்த்தியுள்ளது. அந்தச் சோதனை குறித்த விரிவான செய்தித் தொகுப்பு இதோ…
ஆத்மநிர்பர் பாரத் திட்டத்தின் கீழ், பாதுகாப்புத் துறையிலும் தன்னிறைவு இலக்கை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. இந்திய முப்படைகளுக்குத் தேவையான நவீன ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகளை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (DRDO) உள்நாட்டிலேயே வடிவமைத்து தயாரித்து வருகிறது.
அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ஒடிசாவில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்தில், ஒரே ஏவுதளத்திலிருந்து மிகக் குறுகிய நேர இடைவெளியில் இரண்டு ‘பிரளய்’ ஏவுகணைகள் செலுத்தப்பட்டன. இந்த ‘சால்வோ லாஞ்ச்’ முறையிலான சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்ததாக DRDO அறிவித்துள்ளது.
ஏவப்பட்ட ஏவுகணைகள் அனைத்தும் முன்கூட்டியே நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை மிகத் துல்லியமாக தாக்கி அழித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதன் காணொளியையும் DRDO தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
இந்தச் சோதனை, DRDO-வின் மூத்த விஞ்ஞானிகள், இந்திய ராணுவம், இந்திய விமானப்படை அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது.
‘பிரளய்’ என்பது திட எரிபொருளைப் பயன்படுத்தி இயங்கும், உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ‘குவாசி-பாலிஸ்டிக்’ வகை ஏவுகணையாகும். மிகுந்த துல்லியத்துடன் இலக்கை தாக்கும் வகையில், அதிநவீன வழிகாட்டுதல் மற்றும் வழிசெலுத்தல் தொழில்நுட்பங்கள் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
எதிரியின் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகளைத் தவிர்க்கும் வகையில், நடுவானில் தனது பயண பாதையை மாற்றிக் கொள்ளும் திறனும் (Manoeuvrability) இந்த ஏவுகணைக்கு உள்ளது.
மேலும், பல்வேறு வகையான போர்த் தளவாடங்களை சுமந்து செல்லும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, 500 முதல் 1,000 கிலோ வரை வெடிபொருட்களை ஏற்றிச் செல்லக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 150 முதல் 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை மிகுந்த துல்லியத்துடன் அழிக்கும் ஆற்றல் இதற்கு உள்ளது.
இந்த முக்கியமான சோதனை வெற்றிக்காக DRDO, இந்திய ராணுவம், விமானப்படை, சம்பந்தப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் இதில் பங்கேற்ற அனைத்து பணியாளர்களையும் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டியுள்ளார்.
‘பிரளய்’ ஏவுகணையின் சால்வோ முறையிலான ஏவுதல் வெற்றிகரமாக முடிவடைந்தது, அதன் செயல்திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறையின் செயலாளரும், DRDO தலைவருமான டாக்டர் சமீர் வி. காமத், ‘பிரளய்’ ஏவுகணை அமைப்பு இந்திய பாதுகாப்புப் படைகளில் இணைக்க முழுமையாக தயாராக இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளார்.