வங்கதேசத்தில் இரு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது தாக்குதல் – நிலவும் அச்சநிலை
வங்கதேசத்தில் கடந்த இரண்டு வாரங்களில் நான்கு இந்துக்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்பட்ட சம்பவங்கள், அந்நாட்டில் கடும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
மாணவர் அமைப்பின் தலைவர் ஷெரீப் உஸ்மான் ஹாடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் பல பகுதிகளில் கலவரம் வெடித்தது. இந்தச் சம்பவங்களைத் தொடர்ந்து, சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த இந்துக்கள் குறிவைத்து தாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
அதில், திபு சந்திர தாஸ் என்ற இளம் இந்து, கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதுடன், அவரது உடலுக்கு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து, ஷரிதாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோகோன் சந்திர தாஸ் என்ற மற்றொரு இந்துவும் வன்முறைக்கு இலக்காகியுள்ளார். அடையாளம் தெரியாத நபர்கள் அவரை சரமாரியாக தாக்கியதுடன், பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததாக கூறப்படுகிறது.
இதில் கடுமையாக காயமடைந்த கோகன் சந்திர தாஸ், மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இவ்வாறு, கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நான்கு இந்துக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளதால், வங்கதேசத்தில் சிறுபான்மை மக்களிடையே அச்சமும் கவலையும் அதிகரித்துள்ளது.