உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா!
இந்த ஆண்டில் இந்தியா உலகின் நான்காவது மிகப்பெரிய பொருளாதார நாடாக முன்னேறியதற்கு, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கட்டமைப்பு மாற்றங்களும் சீர்திருத்தங்களுமே முக்கிய காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
உலக நாடுகள் பலவும் போராட்டங்கள், பணவீக்கம், பொருளாதார மந்தம் உள்ளிட்ட கடுமையான சவால்களை எதிர்கொண்ட காலகட்டத்திலும், இந்தியா நிலையான வளர்ச்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறி வருவதாக மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் புதிய பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் இந்திய பொருளாதாரத்தை உலகளவில் நான்காவது இடத்திற்குக் கொண்டு சென்றுள்ளன.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், இந்தியா தொடர்ச்சியாக உயர்ந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்து, உலகின் மிக வேகமாக முன்னேறும் முக்கிய பொருளாதாரங்களில் ஒன்றாக திகழ்ந்து வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளதாகவும், இதன் விளைவாக 4.18 டிரில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புடைய GDP உடன் ஜப்பானை முந்தி, இந்தியா உலகின் 4-ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 டிரில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என்றும், அதன் மூலம் ஜெர்மனியை பின்னுக்குத் தள்ளி உலகின் மூன்றாவது இடத்தை இந்தியா கைப்பற்றும் என்றும் மத்திய அரசு மதிப்பீடு வெளியிட்டுள்ளது.
இந்த அபார வளர்ச்சிக்கு, உறுதியான பொருளாதார அடித்தளம் மற்றும் இடையறாத சீர்திருத்த நடவடிக்கைகளே பிரதான காரணம் என மத்திய அரசு பெருமிதத்துடன் தெரிவித்துள்ளது.