கடும் பொருளாதார வீழ்ச்சி – தெருக்களில் குவிந்த வியாபாரிகள் | ஈரானில் பரவிய கலவரப் போராட்டங்கள்
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வும், நாணயத்தின் மதிப்பு சரிவும் காரணமாக ஈரானில் மக்கள் அதிருப்தி உச்சத்தை எட்டியுள்ளது. இதன் வெளிப்பாடாக நாடு முழுவதும் வணிகர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், முக்கிய பல்கலைக்கழகங்களில் மாணவர்களும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர். இந்த நிலைமைக்கு காரணமான பின்னணியை விரிவாகப் பார்ப்போம்.
மேற்கத்திய நாடுகள் விதித்த பொருளாதார தடைகள் காரணமாக, பல ஆண்டுகளாகவே ஈரான் கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு எரிபொருள் விலை உயர்த்தப்பட்டதைத் தொடர்ந்து, தலைநகர் தெஹ்ரான் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட நகரங்களில் மக்கள் தெருக்களில் இறங்கி போராடினர். அந்த கலவரங்களில் பல உயிரிழப்புகள் ஏற்பட்டன.
அதேபோல், 2022ஆம் ஆண்டில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு மீண்டும் ஈரானை நிலைகுலைய வைத்தது. ஹிஜாப் சட்டத்தை மீறியதாக கைது செய்யப்பட்ட 22 வயது இளம்பெண் மஹ்சா அமினி காவலில் உயிரிழந்த சம்பவம், மக்கள் கோபத்தை வெடிக்கச் செய்தது. இதையடுத்து நடந்த போராட்டங்களில் பாதுகாப்புப் படையினர் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்ததுடன், ஆயிரக்கணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதற்கிடையில், அணுசக்தி திட்டம் தொடர்பாக கடந்த ஒரு தசாப்தத்திற்கு முன் நீக்கப்பட்டிருந்த சர்வதேச தடைகள், கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில் ஐக்கிய நாடுகள் சபையால் மீண்டும் அமல்படுத்தப்பட்டன. இதன் தாக்கம் ஈரான் பொருளாதாரத்தை மேலும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. குறிப்பாக, அமெரிக்க டாலர் உள்ளிட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ஈரான் ரியால் மதிப்பு கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் இறக்குமதி பொருட்களின் விலை உச்சத்தைத் தொட்டுள்ளதால், சில்லறை வியாபாரிகள் பெரும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.
கடந்த வாரம், தெஹ்ரானில் அமைந்துள்ள மிகப்பெரிய மொபைல் போன் சந்தையான கிராண்ட் பஜாரில் வியாபாரிகள் கடைகளை மூடி அரசுக்கு எதிராக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டம் தலைநகரைத் தாண்டி கராஜ், ஹமேதான், கெஷ்ம், மலார்ட், இஸ்பஹான், கெர்மன்ஷா, ஷிராஸ், யாஸ்த் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களுக்கும் பரவியது.
இந்த எதிர்ப்புப் போராட்டங்களின் காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவ, பாதுகாப்புப் படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை கலைத்தனர். பண மதிப்பு வீழ்ச்சியால் ஒரு மொபைல் கவரைக் கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், உயர்ந்து வரும் இறக்குமதி செலவுகளை சமாளிக்க அரசு எந்த உதவியும் வழங்கவில்லை என்றும் வணிகர்கள் குற்றம்சாட்டினர். டாலர் மதிப்பு தங்களின் வாழ்வாதாரத்தை எவ்வாறு நசுக்குகிறது என்பதை ஆட்சியாளர்கள் கவனிக்கவில்லை என்றும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்தச் சூழலில், ஈரான் மத்திய வங்கியின் ஆளுநரின் ராஜினாமாவை அரசு ஏற்றுக்கொண்டு, முன்னாள் பொருளாதாரம் மற்றும் நிதித் துறை அமைச்சர் அப்துல்நாசர் ஹெம்மதியை புதிய ஆளுநராக நியமிப்பதாக அறிவித்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்துறை அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்துள்ள அதிபர் மசூத் பெசெஷ்கியான், நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளார்.
இதற்கிடையே, ஈரானில் மாணவர் போராட்டங்களும் தீவிரமடைந்துள்ளன. பல்கலைக்கழக வளாகங்களில் திரண்ட மாணவர்கள், சர்வாதிகார ஆட்சி ஒழிய வேண்டும் என்றும், அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பினர். மேலும், இஸ்லாமிய புரட்சியில் பதவி நீக்கப்பட்ட மறைந்த ஷா முகமது ரெசா பஹ்லவியின் மகனுக்கு ஆதரவாக “ஷா வாழ்க” என்ற முழக்கங்களும் எழுந்தன.
இதற்கு பதிலளித்த அமெரிக்காவில் வசிக்கும் ரெசா பஹ்லவி, தற்போதைய கொமேனி ஆதிக்க ஆட்சி நீடிக்கும் வரை ஈரானின் பொருளாதார நிலை மேலும் மோசமடையும் என்றும், ஈரான் மக்களின் நீதிக்கான போராட்டத்திற்கு தாம் துணை நிற்பதாகவும் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். ஒன்றுபட்டு போராடினால் வெற்றி நிச்சயம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனிடையே, போராட்டக்காரர்களின் துணிச்சலை பாராட்டும் வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறையின் பாரசீக மொழி எக்ஸ் பக்கத்தில், பல ஆண்டுகளாக தோல்வியடைந்த கொள்கைகளால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு நல்ல எதிர்காலத்தை நாடும் ஈரான் மக்களுக்கு அமெரிக்கா ஆதரவாக இருக்கும் என பதிவிடப்பட்டுள்ளது. ஈரான் கடும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டு வருவதாகக் கூறியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ஆட்சி மாற்றம் குறித்து நேரடியாகக் கூறாமல், ஈரான் மக்கள் மகிழ்ச்சியாக இல்லை என்பது மட்டும் தனக்குத் தெரியும் என தெரிவித்தார்.