அரிசி வெளிநாட்டு விற்பனையில் சீனாவை முந்தி இந்தியா முதலிடம்!
இந்த ஆண்டில் அரிசி ஏற்றுமதி அளவில் சீனாவை பின்னுக்கு தள்ளி, இந்தியா உலகின் முன்னணி நாடாக உருவெடுத்துள்ளது. ஒரே ஆண்டில் மட்டும் சுமார் 20 மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான அரிசி இந்தியாவிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட ஏற்றுமதி அளவை விட இரட்டிப்பாக அதிகமாகும். இதன் காரணமாக, உலக அரிசி சந்தையில் இந்தியா ஒப்பற்ற முன்னணியைப் பெற்றுள்ளது.
ஆனால், இந்த சாதனை பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற மாநிலங்களில் உள்ள நெல் உற்பத்தியாளர்களிடம் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தவில்லை.
கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு மற்றும் தொடர்ந்து குறைந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் காரணமாக, அப்பகுதி விவசாயிகள் பல்வேறு சிக்கல்களை சந்தித்து வருகின்றனர். இதனால், அந்த மாநிலங்களில் நெல் சாகுபடி செய்வது அதிக செலவான பயிராக மாறியுள்ளது.
முன்னதாக பஞ்சாப் மற்றும் ஹரியானா பகுதிகளில் 30 அடி ஆழத்திலேயே தண்ணீர் கிடைத்ததாகவும், தற்போது 50 அடி அல்லது அதற்கும் அதிக ஆழத்தில் ஆழ்துளைக் கிணறு அமைத்தால்தான் நீர் கிடைப்பதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதனால், கூடுதல் செலவில் ஆழ்துளைக் கிணறுகளை அமைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி, பெரும் பொருளாதார சுமையை அவர்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.
இந்த விவசாய சிக்கல்களை சமாளிக்க, குறைந்தளவு நீர் தேவைப்படும் மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்ய மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.
எனினும், நெல்லுக்கு வழங்கப்படும் மானியத் திட்டங்களை கருத்தில் கொண்டு, பெரும்பாலான விவசாயிகள் பிற பயிர்களுக்கு மாற தயக்கம் காட்டுவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உதாரணமாக, பஞ்சாபில் ஒரு ஹெக்டேரில் நெல் பயிரிட சுமார் 39,000 ரூபாய் வரை செலவாகும். ஆனால், தினை உள்ளிட்ட சிறுதானியங்களை பயிரிடும் போது, அதைவிட குறைந்த செலவிலேயே சாகுபடி செய்ய முடியும்.
இதன் மூலம் குறைந்தபட்சமாக 5,000 ரூபாய் வரை செலவை குறைக்க முடியும் என அதிகாரிகள் விளக்கமளிக்கின்றனர்.
மற்றொரு புறம், தண்ணீர் பற்றாக்குறை காரணமாக அதிக அளவில் ஆழ்துளைக் கிணறுகள் தோண்டப்படுவது, நிலத்தடி நீர்மட்டத்தை மேலும் வீழ்ச்சியடையச் செய்கிறது.
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், சில குறிப்பிட்ட பகுதிகளில் புதிய ஆழ்துளைக் கிணறுகள் தோண்டுவதற்கு அரசு தடைகள் விதித்து வருகிறது.