டெல்லியில் விமானப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு!
டெல்லியில் விமானங்கள் பறக்க அனுமதியில்லாத விஐபி பாதுகாப்பு பகுதிகளில் வான்வழி பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், புதிய வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
நாட்டின் சுதந்திர தின விழா உரையில், “சுதர்சன சக்கரம்” என்ற பெயரில் முழுமையாக உள்நாட்டில் உருவாக்கப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு அமைப்பு செயல்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
அதன்படி, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் விமானங்கள் பறக்கத் தடை செய்யப்பட்டுள்ள விஐபி மண்டலங்களில் பாதுகாப்பை பல அடுக்குகளாக மேம்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.5,181 கோடி மதிப்பில் நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஒருங்கிணைந்த வான் பாதுகாப்பு ஆயுத அமைப்பை நிறுவ மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) வடிவமைக்கும் இந்த அமைப்பு, டெல்லியைச் சுற்றியுள்ள 30 கிலோ மீட்டர் சுற்றளவில், நவீன வான்வழி அச்சுறுத்தல்களுக்கு எதிராக பலதரப்பட்ட பாதுகாப்பு வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளின் நேரடி இருப்பிடத்தை கண்டறிந்து அவற்றை இடைமறித்து அழிக்கும் திறன் இதற்கு இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த “சுதர்சன சக்கரம்” திட்டம், இந்தியாவின் தற்சார்பு பாதுகாப்பு கொள்கையில் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமையும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.