ரூ.79 ஆயிரம் கோடி மதிப்பிலான ராணுவ உபகரண கொள்முதல் – ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஒப்புதல்
இந்தியாவின் பாதுகாப்பு வலிமையை மேலும் உயர்த்தும் நோக்கில், சுமார் 79 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவ தளவாடங்களை வாங்குவதற்கான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் கூட்டத்தில், இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டது. அந்த கூட்டத்தில் பல்வேறு ராணுவ தேவைகளை பூர்த்தி செய்யும் திட்டங்களுக்கு ஒட்டுமொத்தமாக ரூ.79,000 கோடி மதிப்பிலான ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கீழ், பீரங்கி படைப்பிரிவுக்கான நவீன வெடிமருந்து அமைப்புகள், இலகுரக ரேடார் கருவிகள், பினாகா ராக்கெட் அமைப்பிற்கு தேவையான வெடிமருந்துகள் மற்றும் ராணுவ பயன்பாட்டிற்கான ஒருங்கிணைந்த டிரோன் கண்டறிதல் அமைப்புகள் வாங்க தீர்மானிக்கப்பட்டுள்ளன.
அதேபோல், இந்திய கடற்படையின் தேவைக்காக பொல்லார்ட் புல் டக் வகை இழுப்புப் படகுகள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்திய விமானப்படைக்காக வானில் உள்ள எதிரி இலக்குகளை தாக்கும் ஏவுகணைகள், தேஜாஸ் போர் விமானத்திற்கு தேவையான தொழில்நுட்ப உபகரணங்கள் உள்ளிட்ட முக்கிய தளவாடங்களும் வாங்கப்பட உள்ளன.
இதுகுறித்து சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, நாட்டின் பாதுகாப்புத் திறனை பலப்படுத்துவதில் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.