திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பரமபத வாசல் திறப்பு – பக்தர்கள் வெள்ளம்
திருச்சி ஸ்ரீரங்கத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ரங்கநாதர் ஆலயத்தில், வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.
“பூலோக வைகுண்டம்” என போற்றப்படும் ஸ்ரீரங்கம் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 19ஆம் தேதி ஆரம்பமானது. பகல் பத்து உற்சவம் நடைபெற்று வரும் நிலையில், விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை சிறப்பாக நடந்தேறியது.
இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, “ரங்கா ரங்கா, கோவிந்தா கோவிந்தா” என பக்தி முழக்கமிட்டு, இறைவனை தரிசனம் செய்தனர்.
பரமபத வாசல் திறப்பை ஒட்டி, ரத்தின ஆடை, பாண்டியன் கொண்டை, கிளி மாலை உள்ளிட்ட அலங்காரங்கள் அணிவிக்கப்பட்ட நிலையில், மூலஸ்தானத்தில் இருந்து மோகினி அலங்காரத்தில் புறப்பட்ட ரங்கநாதர், பரமபத வாசலை கடந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதனைத் தொடர்ந்து, பக்தர்கள் அனைவரும் ஆனந்த பரவசத்துடன் பரமபத வாசல் வழியாக சென்று வழிபாடு செய்தனர்.