போர் நிறுத்த ஒப்பந்தம்: 90% ஒத்த கருத்து ஏற்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி அறிவிப்பு
அமெரிக்கா முன்வைத்துள்ள 20 அம்சங்களைக் கொண்ட போர் நிறுத்த முன்மொழிவில் சுமார் 90 சதவீத அளவில் இணக்கம் உருவாகியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா – உக்ரைன் இடையே நடைபெற்று வரும் போர் மூன்று ஆண்டுகளை கடந்தும் முடிவுக்கு வராமல் தொடர்கிறது. இந்த நீண்ட கால மோதலில் இரு தரப்பிலும் ஆயிரக்கணக்கான ராணுவத்தினர் மற்றும் பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். இந்தப் பின்னணியில், போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தீவிரமாக முயற்சி செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக, 20 அம்சங்களை உள்ளடக்கிய போர் நிறுத்த ஒப்பந்த வரைவை டிரம்ப் நிர்வாகம் முன்வைத்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை உக்ரைன் ஏற்க வேண்டும் என ரஷ்யா வலியுறுத்தி வருகிறது.
ஆனால், அந்த ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ள சில பிரிவுகளை ஏற்க உக்ரைன் தொடர்ந்து தயக்கம் காட்டி வந்தது. இந்நிலையில், போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில், அதிபர் டிரம்பை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
சந்திப்பிற்குப் பிறகு இருவரும் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ஜெலென்ஸ்கி, அமெரிக்கா முன்வைத்த 20 அம்ச ஒப்பந்தத்தில் பெரும்பாலான பகுதிகளில், அதாவது சுமார் 90 சதவீத அளவில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
மேலும், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் உக்ரைன் இடையிலான பாதுகாப்பு உத்தரவாதங்கள் தொடர்பாகவும் பெரும்பாலான விஷயங்களில் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். உக்ரைன் அமைதிக்கான தீர்வை ஏற்கத் தயாராக இருப்பதாகவும் ஜெலென்ஸ்கி வலியுறுத்தினார்.