கிறிஸ்துமஸ் தாத்தா தோற்றத்தில் புதின் – ஏஐ உருவாக்கிய வீடியோ இணையத்தில் வைரல்
ரஷ்யாவின் ஜனாதிபதி வ்லாதிமிர் புதின், கிறிஸ்துமஸ் தாத்தா போல வேடமணிந்து உலகின் பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு பரிசுகள் வழங்குவது போன்ற காட்சிகளைக் கொண்ட செயற்கை நுண்ணறிவு (AI) வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
சமீபத்தில் உலகெங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், இந்தப் பண்டிகையை முன்னிட்டு கென்யாவில் உள்ள ரஷ்ய தூதரகம் ஒரு ஏஐ அடிப்படையிலான வீடியோவை இணையத்தில் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில், புதின் கிறிஸ்துமஸ் தாத்தா உடை அணிந்து, உலக அரசியல் தலைவர்களை சந்தித்து பரிசுகள் வழங்குவது போன்ற கற்பனை காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
வீடியோவில் அமெரிக்காவின் டாலர் சின்னம் தரையில் விழுந்து உடைந்து சிதறும் காட்சியும், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ராணுவ ஜெட் விமானங்களை பரிசாக வழங்குவது போன்ற காட்சியும் இடம்பெறுகின்றன. மேலும், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு கைவிலங்கு வழங்கப்பட்டு, பின்னர் சிறையில் அடைக்கப்படுவது போன்ற காட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசியல் நையாண்டி மற்றும் கற்பனை கலந்த இந்த செயற்கை நுண்ணறிவு வீடியோ தற்போது இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்து, வைரலாகி வருகிறது.