ஆப்ரேஷன் சிந்தூர்: நூர் கான் விமானத் தளம் கடுமையாக பாதிப்பு – பாகிஸ்தான் அதிகாரப்பூர்வ ஒப்புதல்
ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டின் துணைப் பிரதமரும் வெளியுறவுத் துறை அமைச்சருமான இஷாக் தார் தற்போது வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். இதனை மையமாகக் கொண்ட விரிவான செய்தி தொகுப்பிது.
கடந்த ஏப்ரல் மாதம் பஹல்காமில் நடைபெற்ற பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாத தாக்குதலில், 26 நிரபராத இந்து சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர். இந்த கொடூர சம்பவத்திற்கு பதிலடி அளிக்கும் வகையில், இந்தியா “ஆப்ரேஷன் சிந்தூர்” என்ற ராணுவ நடவடிக்கையை தொடங்கியது. இந்த நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த பல பயங்கரவாத முகாம்கள் மற்றும் பயிற்சி மையங்களை இந்திய ராணுவம் அழித்தது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு எதிர்வினையாக, இந்தியாவின் முக்கிய நகரங்கள் மற்றும் இராணுவ நிலையங்களை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய 800-க்கும் அதிகமான ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய பாதுகாப்புப் படைகள் வானிலேயே தடுத்து அழித்தன. தொடர்ந்து, பாகிஸ்தானில் அமைந்துள்ள நூர் கான், சர்கோதா, ரஃபிக்கி, ஜேக்கபாபாத், முரிட்கே உள்ளிட்ட 11 முக்கிய விமானப்படை தளங்களை இந்திய ஏவுகணைகள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் திடீர் மற்றும் தீவிர தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல், பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்தம் கோரியதைத் தொடர்ந்து, ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்திய தாக்குதலுக்குப் பின்னர், மே 13ஆம் தேதி வெளியான மேக்சர் செயற்கைக்கோள் படங்கள், பாகிஸ்தானின் நூர் கான், சர்கோதா மற்றும் ஜேக்கபாபாத் விமானப்படை தளங்கள் சேதமடைந்திருந்ததை தெளிவாகக் காட்டின.
ஆரம்பத்தில் ஆப்ரேஷன் சிந்தூரால் எந்த பாதிப்பும் இல்லை என மறுத்துவந்த பாகிஸ்தான் தலைவர்கள், தற்போது உண்மைகளை ஒப்புக்கொள்ளத் தொடங்கியுள்ளனர். சமீபத்தில் ஊடகங்களை சந்தித்த இஷாக் தார், இந்திய ட்ரோன்கள் நூர் கான் விமானப்படை தளத்தை தாக்கியதாகவும், அந்த தாக்குதலில் முக்கிய ராணுவ கட்டமைப்புகள் சேதமடைந்ததாகவும், அங்கு பணியாற்றிய சிலர் கடுமையாக காயமடைந்ததாகவும் தெரிவித்தார்.
36 மணி நேர காலப்பகுதியில் குறைந்தது 80 ட்ரோன்கள் பறக்கவிடப்பட்டதாக கூறிய இஷாக் தார், அதில் ஒரே ஒரு ட்ரோன் தாக்குதலே பெரும் சேதத்திற்கு காரணமாக அமைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமெரிக்க வெளியுறவுத் துறை செயலாளர் மார்கோ ரூபியோவும், சவுதி அரேபிய வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் ஃபர்ஹானும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்ததாகவும், இந்தியாவுடன் நேரடி போரை பாகிஸ்தான் விரும்பவில்லை என்பதையும் அவர் கூறியுள்ளார். இதன் பின்னரே இந்தியாவிடம் போர்நிறுத்த கோரிக்கை வைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு முன், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு கருதி பாகிஸ்தான் ராணுவம் தங்களை பதுங்கு குழிகளில் தங்குமாறு அறிவுறுத்தியதாக அந்நாட்டு அதிபர் ஆசிஃப் அலி ஜர்தாரி கூறியிருந்தார். பெனாசிர் பூட்டோ நினைவு நாளில் உரையாற்றிய ஜர்தாரி, பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட தாக்குதலை அசிம் முனீர் தடுத்ததாகவும், அதற்காகவே அவருக்கு ஃபீல்டு மார்ஷல் பதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், நூர் கான் விமானத் தளத்தை தாக்கியதாக இந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத போதிலும், பாகிஸ்தான் தானாக முன்வந்து தற்போது தங்களின் முக்கிய விமானப்படைத் தளங்கள் தாக்கப்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.