பாரதத்தின் முன்னேற்றம் சனாதன தர்மத்தின் மீளெழுச்சி : ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்
பாரத தேசத்தின் தற்போதைய எழுச்சி, சனாதன தர்மத்தின் மறுமலர்ச்சியைக் குறிக்கிறது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் அருகே அமைந்துள்ள ‘கன்ஹா ஷாந்தி வனம்’ பகுதியில், விஷ்வ சங்க் ஷிபிர் (Vishwa Sangh Shibir) என்ற பெயரில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஹிந்து ஸ்வயம்சேவக் சங்கம், சனாதன தர்ம ஸ்வயம் சேவக சங்கம், ஹிந்து சேவா சங்கம், சேவா இன்டர்நேஷனல், சம்ஸ்கிருத பாரதி மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 2,000 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
தர்ம அடிப்படையிலான வாழ்வியல், சமூக பொறுப்பு மற்றும் பாரம்பரிய மதிப்புகளை வலியுறுத்தும் நோக்குடன் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், பாரதம் உலகிற்கு வழிகாட்டும் “விஸ்வகுரு”வாக உருவெடுப்பதற்கான காலகட்டம் தற்போது வந்துவிட்டதாகக் கூறினார். இந்தியாவின் வளர்ச்சி என்பது வெறும் பொருளாதார முன்னேற்றம் மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் பண்பாட்டு அடையாளங்களின் மீளுருவாக்கம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பாரதத்தின் இந்த எழுச்சி, சனாதன தர்மத்தின் அடிப்படை கொள்கைகள் மீண்டும் உலக அரங்கில் வலிமையாக நிலைநிறுத்தப்படுவதற்கான அறிகுறி என்றும் மோகன் பகவத் தெரிவித்தார். விஸ்வகுரு என்ற நிலை இந்தியாவின் கனவு மட்டுமல்ல, தற்போதைய உலக சூழலில் அது உலகின் தேவையாகவும் மாறியுள்ளது என அவர் வலியுறுத்தினார்.
மேலும், தர்மம், நெறிமுறைகள் மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவை பாரதத்தின் பலமாக இருந்து வந்துள்ளன என்றும், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தியா உலக அமைதிக்கும் வளர்ச்சிக்கும் வழிகாட்டும் சக்தியாக உருவாகும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.