RSS மற்றும் BJP-யை புகழ்ந்த திக்விஜய் சிங் – காங்கிரசில் உள் முரண்பாடு வெளிச்சம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பையும் பாஜகவையும் பாராட்டி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு, அரசியல் வட்டாரங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அதே நேரத்தில், அந்தப் பதிவு காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் உள் அரசியல் மற்றும் தலைமை மையப்படுத்தப்பட்ட செயல்பாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் பேசப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியில் நீண்ட காலமாக முக்கியப் பொறுப்புகளில் இருந்து வரும் திக்விஜய் சிங், சமீபத்தில் ராகுல் காந்திக்கு கடிதம் எழுதி, கட்சிக்குள் கட்டமைப்பு சீர்திருத்தங்கள் அவசியம் என வலியுறுத்தியிருந்தார். கட்சியின் செயல்பாடுகளில் ஜனநாயக நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்தச் சூழலில், திக்விஜய் சிங் வெளியிட்டுள்ள புதிய எக்ஸ் பதிவு அரசியல் அரங்கில் விவாதத்தை கிளப்பியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் பழைய புகைப்படத்தை அவர் தனது பதிவில் பகிர்ந்துள்ளார். அந்தப் புகைப்படத்தில், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அருகே, தரையில் அமர்ந்த நிலையில் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி காணப்படுகிறார்.
இந்தப் புகைப்படத்தை குறிப்பிட்ட திக்விஜய் சிங், ஆர்எஸ்எஸ் அமைப்பின் சாதாரண சேவகராகவும், ஜனசங்க தொண்டராகவும் இருந்த ஒருவர், பின்னர் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராகவும், அதன் பின் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்துள்ளார் என்பதை எடுத்துக்காட்டினார். இது, அந்த அமைப்பின் கட்டமைப்பு வலிமையையும், உழைப்பாளர்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரத்தையும் வெளிப்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜகவில் கடுமையாக உழைக்கும் தொண்டர்களுக்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்பதே தனது பதிவின் உட்பொருள் என அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர். இந்தக் கருத்தை வெளிப்படுத்தும் விதமாக, திக்விஜய் சிங் தனது எக்ஸ் பதிவில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட முக்கிய தலைவர்களை டேக் செய்துள்ளார்.
காங்கிரஸ் தலைமையையே நேரடியாக டேக் செய்து, எதிர்க்கட்சியான பாஜகவையும் ஆர்எஸ்எஸ் அமைப்பையும் பாராட்டிய திக்விஜய் சிங்கின் இந்த நடவடிக்கை, காங்கிரஸ் கட்சிக்கு புதிய நெருக்கடியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு உடனடியாக பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் சி.ஆர். கேசவன், திக்விஜய் சிங்கின் பதிவு காங்கிரஸ் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கையும், ஜனநாயகமற்ற தலைமையையும் வெளிப்படுத்தியுள்ளது என்று விமர்சித்தார். ராகுல் காந்தியின் குடும்பம் கட்சியை எவ்வாறு கட்டுப்பாட்டுடன், ஒரே மையத்தில் இருந்து நடத்தி வருகிறது என்பதையும் இந்தப் பதிவு தெளிவுபடுத்துகிறது என்றும் அவர் கூறினார். மேலும், திக்விஜய் சிங் எழுப்பிய இந்த அரசியல் சவாலுக்கு ராகுல் காந்தி பதிலளிப்பாரா எனவும் கேள்வி எழுப்பினார்.
இதனிடையே, திக்விஜய் சிங்கின் மாநிலங்களவை பதவிக்காலம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் முடிவடைய உள்ள நிலையில், அவருக்கு மீண்டும் அந்த வாய்ப்பு வழங்கப்படுமா என்பது குறித்து காங்கிரசுக்குள் சந்தேகங்கள் நிலவி வருகின்றன. மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த கமல்நாத், மீனாட்சி நடராஜன் உள்ளிட்டோர் ஏற்கனவே அந்தப் பதவிக்கான போட்டியில் இருப்பதாகவும், மாநில காங்கிரஸ் தலைவர் ஜிது பட்வாரி மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர் உமாங் சிங்கர் ஆகியோரும் திக்விஜய் சிங்கிற்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பின்னணியில்தான், திக்விஜய் சிங்கின் இந்த எக்ஸ் பதிவு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படி இருந்தாலும், காங்கிரசில் நிலவும் குடும்ப அரசியல் மற்றும் உள் ஜனநாயக குறைபாடுகள் குறித்த அவரது நேரடியான கருத்தாகவே இந்தப் பதிவு பார்க்கப்படுகிறது.
நாடு முழுவதும் ஜனநாயகம் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசிவரும் நிலையில், சொந்த கட்சிக்குள்ளேயே அந்த ஜனநாயகம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்ற கேள்வியை மீண்டும் ஒருமுறை அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது திக்விஜய் சிங்கின் இந்த பதிவு.