நூர் கான் விமானப்படை தள தாக்குதல் – இந்திய ராணுவ நடவடிக்கையை பாகிஸ்தான் ஒப்புதல்
பாகிஸ்தானின் நூர் கான் விமானப்படை தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக, அந்நாட்டு துணை பிரதமரும் வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில், 26 அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய ராணுவம் “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் சிறப்பு நடவடிக்கையை தொடங்கியது.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்கள் தாக்கப்பட்டு முற்றிலும் அழிக்கப்பட்டதாக இந்தியா அறிவித்தது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய இஷாக் தார், கடந்த 36 மணி நேரத்தில் சுமார் 80 ட்ரோன்கள் இந்தியாவால் பாகிஸ்தான் எல்லைக்குள் அனுப்பப்பட்டதாக கூறினார். அவற்றில் ஒன்று, ராவல்பிண்டியில் அமைந்துள்ள நூர் கான் விமானப்படை தளத்தை துல்லியமாக தாக்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதலால் அந்த விமானப்படை தளத்தின் ராணுவ கட்டமைப்புகள் சேதமடைந்துள்ளன என்றும், பல வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் இஷாக் தார் கூறினார்.