நைஜீரியாவில் ஐ.எஸ் முகாம்கள் மீது அமெரிக்க தாக்குதல் – காரணம் என்ன?
நைஜீரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையில் பல பயங்கரவாதிகள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் தாக்குதலுக்குப் பின்னணி என்ன என்பதை இந்தச் செய்தித் தொகுப்பு விளக்குகிறது.
மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நைஜீரியா, ஆப்பிரிக்க கண்டத்தின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகும். பல ஆண்டுகளாகவே அங்கு தீவிரவாதம் மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. குறிப்பாக, நைஜீரியாவின் வடகிழக்கு பகுதிகள் பயங்கரவாத நடவடிக்கைகளின் மையமாக மாறியுள்ளன.
அப்பகுதியில் செயல்பட்டு வரும் போகோ ஹராம் என்ற அடிப்படைவாத அமைப்பு, ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளது. இதற்கு மேலாக, சமீப காலங்களில் ஐஎஸ் அமைப்பும் நைஜீரியாவில் தனது தாக்குதல்களை அதிகரித்து வருகிறது. இதனால் நாட்டின் பொருளாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், கல்வி, வேலைவாய்ப்பு, வாழ்வாதாரம் உள்ளிட்ட பல துறைகளிலும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக, கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் தாக்குதல்களுக்கு இலக்காகி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் இதுகுறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், நைஜீரியாவில் மதச் சுதந்திரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்தவர்களின் பாதுகாப்பே கேள்விக்குறியாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும், கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுக்க நைஜீரிய அரசு போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக, இந்த விவகாரத்தில் உறுதியான நடவடிக்கை எடுக்க அமெரிக்க பாதுகாப்புத் துறைக்கு உத்தரவிட்டதாகவும், தேவைப்பட்டால் நைஜீரியாவுக்கான உதவிகளை நிறுத்தும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார். இஸ்லாமிய தீவிரவாதத்தை முற்றிலும் ஒழிக்க அமெரிக்க படைகள் நைஜீரியாவிற்குள் நுழையக்கூடும் எனவும் அவர் கூறினார்.
இதனையடுத்து, சர்வதேச மதச் சுதந்திரச் சட்டத்தின் கீழ் நைஜீரியாவை “கவலைக்குரிய நாடு” என்ற பட்டியலில் அமெரிக்கா சேர்த்தது. தொடர்ந்து, அமெரிக்க–ஆப்பிரிக்க ராணுவ கூட்டமைப்பு, நைஜீரியாவில் செயல்பட்டு வரும் பயங்கரவாத அமைப்புகளை அழிக்கும் வகையில் விரிவான திட்டங்களைத் தயாரித்தது. அந்தத் திட்டங்கள் வெள்ளை மாளிகை மற்றும் பென்டகன் நிர்வாகத்திற்கு அனுப்பப்பட்டன.
இதன் அடிப்படையில், வடமேற்கு நைஜீரியாவில் செயல்பட்டு வந்த ஐஎஸ் பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக வலுவான தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவத்திற்கு ட்ரம்ப் உத்தரவிட்டார். அதன்படி, சோகோட்டோ மாகாணத்தில் அமைந்திருந்த பயங்கரவாத முகாம்களை குறிவைத்து அமெரிக்க விமானப்படை தாக்குதல் நடத்தியது.
இந்த வான்வழி தாக்குதலில் பல தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை நைஜீரிய வெளியுறவுத் துறை அமைச்சகமும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. பயங்கரவாத முகாம்கள் மீது மிகத் துல்லியமான தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், அமெரிக்காவின் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்பட்டதாகவும் அந்த அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில், “கிறிஸ்தவர்களுக்கு எதிரான தாக்குதல்கள் தொடர்ந்தால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என நான் முன்பே எச்சரித்திருந்தேன். தற்போது அமெரிக்க ராணுவம் சரியான நடவடிக்கையை எடுத்துள்ளது. எனது தலைமையிலான அரசு இஸ்லாமிய தீவிரவாதம் வளர அனுமதிக்காது. இந்த பணியை வெற்றிகரமாக நிறைவேற்றிய அமெரிக்க படைக்கு கடவுளின் ஆசீர்வாதம் உண்டாகட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அதே நேரத்தில், அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு நைஜீரிய அரசு ஆதரவு தெரிவித்தாலும், கிறிஸ்தவர்கள் மட்டும் குறிவைக்கப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டை மறுத்துள்ளது. நாட்டில் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் தாக்குதல்களுக்கு உள்ளாகி வருவதாகவும், அனைத்துவித வன்முறைகளையும் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் நைஜீரிய அரசு விளக்கம் அளித்துள்ளது.