வங்கதேசத்தில் ஜிஹாதி அமைப்புகளின் மீளெழுச்சி – இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அதிகரிக்கும் அபாயங்கள்

Date:

வங்கதேசத்தில் ஜிஹாதி அமைப்புகளின் மீளெழுச்சி – இந்திய எல்லைப் பாதுகாப்புக்கு அதிகரிக்கும் அபாயங்கள்

அண்டை நாடுகளுடன் நல்லுறவை முன்னிறுத்தும் கொள்கையை இந்தியா பின்பற்றி வரும் சூழலில், வங்கதேசத்தில் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தின் செயல்பாடுகள், இந்தியா–வங்கதேச உறவுகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

1971 ஆம் ஆண்டு விடுதலைப் போருக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் இருந்த நெருக்கமான உறவு, 2024 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஆட்சியிலிருந்து விலகியதற்குப் பிறகு முற்றிலும் மாறுபட்ட நிலைக்கு சென்றுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்தியாவுக்கு எதிரான அடிப்படைவாத இஸ்லாமிய அரசியல் சக்திகள் வங்கதேசத்தில் மீண்டும் வலுப்பெற தொடங்கியுள்ளன.

ஷேக் ஹசீனா ஆட்சிக்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்த ‘இன்குலாப் மோன்சோ’ அமைப்பின் தலைவர் ஷெரிப் உஸ்மான் ஹாடி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, இந்தியா மீது குற்றம் சாட்டி வங்கதேசம் முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. அவரது கொலையில் அவாமி லீக் கட்சியினருக்குத் தொடர்பு இருப்பதாகவும், குற்றவாளிகள் இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளதாகவும் கூறி, வன்முறையாளர்கள் இந்தியா எதிர்ப்பு உணர்வுகளை தூண்டியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, திபு சந்திர தாஸ் மற்றும் அம்ரித் மொண்டல் சாம்ராட் என்ற இந்து இளைஞர்கள் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்திய தூதரகங்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களால் இந்தியா விசா சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது.

முகமது யூனுஸ் ஆட்சி பொறுப்பேற்றதும், முதன்மையாக ஜமாத்-இ-இஸ்லாமி என்ற தடைசெய்யப்பட்ட இஸ்லாமிய அமைப்பின் மீதான தடையை நீக்கியது. அதன்பின், அன்சாருல்லா பங்களா டீம் அமைப்பின் தலைவர் முகமது ஜசிமுதீன் ரஹ்மானி விடுதலை செய்யப்பட்டார். அதேபோல், முன்னாள் பிரதமர் கலீதா ஜியாவும் சிறையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பொதுத் தேர்தலை முன்னிட்டு, ஜமாத்-இ-இஸ்லாமி தலைமையில் பல இஸ்லாமிய அமைப்புகள் ஒன்றிணைந்து, இந்தியாவுக்கு எதிரான அரசியல் நிலைப்பாட்டை தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. ஷேக் ஹசீனாவின் நீண்டகால ஆட்சியில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரித்ததாக வங்கதேச இஸ்லாமியர்கள் பெரும்பாலோர் நம்புகின்றனர். மேலும், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனாவை ஒப்படைக்க மறுத்ததுதான் இந்தியா மீது விரோத உணர்வு அதிகரிக்கக் காரணம் என கூறப்படுகிறது.

இதற்கிடையே, வெளியுறவு கொள்கையில் மாற்றம் கொண்டுவந்த யூனுஸ் அரசு, சீனா, பாகிஸ்தான் மற்றும் மேற்கத்திய நாடுகளுடன் உறவுகளை வலுப்படுத்தி வருகிறது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கியமான சிலிகுரி தாழ்வாரம் பகுதியில் சீன ராணுவ உள்கட்டமைப்பு வளர்வதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், சிட்டகாங் மற்றும் மோங்லா துறைமுகங்களை சீன மற்றும் பாகிஸ்தான் இராணுவம் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை இந்தியாவின் பாதுகாப்பு வட்டாரங்களில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே, கலீதா ஜியா ஆட்சிக்காலத்தில் பாகிஸ்தானுடன் வங்கதேசம் நெருங்கியபோது, உல்பா போன்ற பயங்கரவாத அமைப்புகள் வங்கதேச மண்ணிலிருந்து அசாமில் தாக்குதல்களை நடத்திய வரலாறு உள்ளது. அதேபோல், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பின் செல்வாக்கு மீண்டும் அதிகரிப்பது இந்தியாவின் உள்நாட்டு பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக கருதப்படுகிறது.

மேலும், கங்கை நீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க வேண்டிய சூழலில், பாகிஸ்தான் மற்றும் சீனாவுடன் வங்கதேசம் காட்டும் நெருக்கம், இந்தியாவுக்கு புதிய சிக்கல்களை உருவாக்கும் என அரசியல் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவின் உதவியாலேயே வங்கதேசம் உருவானபோது, ஜமாத்-இ-இஸ்லாமி போன்ற அமைப்புகள் அந்நாட்டில் புறக்கணிக்கப்பட்டன. பின்னர் ஜியாவுர் ரஹ்மான் ஆட்சியில் அவை மீண்டும் அரசியல் அரங்கில் இடம் பெற்றன. ஷேக் ஹசீனா ஆட்சியில் அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டாலும், தற்போது யூனுஸ் ஆட்சியில் அவை மீண்டும் அதிகாரமும் செல்வாக்கும் பெற தொடங்கியுள்ளன.

1971க்குப் பிறகு, வங்கதேசத்தில் மீண்டும் எழுச்சி பெறும் ஜிஹாதி அமைப்புகள், இந்தியாவுக்கு குறிப்பாக அதன் வடகிழக்கு மாநிலங்களுக்கு கடுமையான பாதுகாப்புச் சவால்களை உருவாக்கி வருகின்றன. வங்கதேசத்தில் உருவாகும் புதிய அரசுடன் இணைந்து செயல்பட இந்தியா தயாராக இருப்பதாக ஏற்கெனவே தெரிவித்துள்ள நிலையில், அந்நாட்டின் அரசியல் ஸ்திரத்தன்மை இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்தியா–சீனா நெருக்கத்தைத் தடுக்கும் முயற்சியா? – அமெரிக்கா மீது சீனாவின் கடும் குற்றச்சாட்டு

இந்தியா–சீனா நெருக்கத்தைத் தடுக்கும் முயற்சியா? – அமெரிக்கா மீது சீனாவின் கடும்...

சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார்

சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார் முடிச்சூரில் அமைந்துள்ள...

திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம்

திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம் திருச்சி மாவட்டத்தில் உள்ள...

தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு

தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு சென்னை மாதவரம்...