K-4 அணுசக்தி ஏவுகணை சோதனை: இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பில் புதிய மைல்கல்
அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையான K-4 ஐ இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இந்த சோதனை, இந்தியாவின் அணுசக்தி பாதுகாப்பு வலிமையை வெளிப்படுத்தும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது.
உலகின் அணுசக்தி நாடுகளில், “முதலில் அணு ஆயுதம் பயன்படுத்தமாட்டோம்” என்ற கொள்கையை பின்பற்றும் நாடுகளாக இந்தியாவும் சீனாவும் மட்டுமே உள்ளன. ஆனால் அந்த கொள்கை, அணுசக்தி தயார்நிலையை குறைக்கும் ஒன்றல்ல. எதிரி நாடு முதலில் அணு தாக்குதல் மேற்கொண்டால், அதற்கு பல மடங்கு வலுவான பதில் தாக்குதலை நடத்தும் திறனை இந்தியா தொடர்ந்து வளர்த்து வருகிறது.
இந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் ஒருங்கிணைந்த வழிநடத்தப்பட்ட ஏவுகணை மேம்பாட்டு திட்டத்தில் முக்கிய பங்காற்றிய முன்னாள் குடியரசுத் தலைவரும், “இந்தியாவின் ஏவுகணை மனிதன்” எனப் போற்றப்படும் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, K-தொடர் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு முக்கிய கட்டமாக, அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஏவப்படும் K-4 ஏவுகணை சோதனை சமீபத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஏவுகணை சோதனை, INS அரிஹந்த் அல்லது INS அரிகாட் எனும் எந்த கப்பலில் இருந்து நடத்தப்பட்டது என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், வங்காள விரிகுடாவில், விசாகப்பட்டினம் கடற்கரையிலிருந்து தொலைவில், INS அரிஹாட் என்ற அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3,500 கிலோமீட்டர் வரை உள்ள இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட K-4 ஏவுகணை, இந்தியாவின் கடல் வழி அணுசக்தி வலிமைக்கு ஒரு உறுதியான சான்றாக உள்ளது. இந்த ஏவுகணை, சுமார் 2.5 டன் எடையுள்ள அணு வெடிகுண்டை சுமந்து செல்லும் திறன் கொண்டது. தற்போதைய சோதனை, K-4 ஏவுகணையின் இரண்டாவது வெற்றிகரமான சோதனை ஆகும். இதற்கு முன்பு, 2024 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 29-ஆம் தேதி, இந்த ஏவுகணை இந்தியக் கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது.
இதன் மூலம், தரை, வான் மற்றும் கடலின் ஆழத்திலிருந்து அணு ஆயுதங்களை ஏவக்கூடிய திறன் கொண்ட மிகச் சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளது. தற்போது இந்தியக் கடற்படையில் INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட் என இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் செயல்பாட்டில் உள்ளன. மேலும் இரண்டு கப்பல்கள் கடல் சோதனை நிலையில் உள்ளன.
அக்னி-III தரைவழி ஏவுகணையை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட K-4, இந்தியாவின் மிக நீண்ட தூரம் செல்லக்கூடிய கடல்வழி பாலிஸ்டிக் ஏவுகணை ஆகும். தரையிலிருந்து ஏவப்படுவதற்காக வடிவமைக்கப்பட்ட அமைப்பை, கடலின் ஆழத்தில் இருந்து ஏவுவதற்காக பிரத்யேகமாக மாற்றியமைத்ததே இதன் சிறப்பு.
பாலிஸ்டிக் ஏவுகணை திறன் கொண்ட அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், உலகின் மிக ரகசியமான மற்றும் ஆபத்தான போர் இயந்திரங்களாகக் கருதப்படுகின்றன. தரையில் அமைந்துள்ள ஏவுதளங்களைப் போல செயற்கைக்கோள்களால் கண்டறிய முடியாதவையாகவும், ரேடார் கண்காணிப்பிலிருந்து தப்பித்தவையாகவும் இவை கடலின் ஆழத்தில் பதுங்கி நிற்கின்றன. பல ஆண்டுகளுக்கு மின்சாரம் உற்பத்தி செய்யும் அணு உலையால் இயக்கப்படும் இந்தக் கப்பல்கள், நீண்ட காலம் நீருக்கடியில் இயங்கக்கூடியவை.
இந்த நீர்மூழ்கிக் கப்பல்கள் மெதுவாக நகரும், காலவரையின்றி கடலுக்கடியில் தங்கும் திறன் கொண்டவை. அவற்றின் செயல்பாட்டை கட்டுப்படுத்துவது, பணியாளர்களின் சகிப்புத்தன்மை மற்றும் உணவுப் பொருட்களே ஆகும். இந்தியாவின் தரைவழி மற்றும் வான்வழி அணு தளங்கள் முழுமையாக அழிக்கப்பட்டாலும், கடலின் ஆழத்தில் மறைந்திருக்கும் இந்தக் கப்பல்கள் எதிர்பாராத, பேரழிவான பதில்தாக்குதலை நடத்தும்.
இதன் பொருள், இந்தியாவுக்கு எதிராக எந்த நாடு முதலில் அணுசக்தி தாக்குதல் மேற்கொண்டாலும், அது தன்னையே அழித்துக் கொள்வதற்கு சமம் என்பதைக் குறிக்கிறது. தற்போது சேவையில் உள்ள இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களுடன், சோதனை நிலையில் உள்ள INS அரிதமன் என்ற மூன்றாவது கப்பல் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கடற்படையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனைத் தொடர்ந்து, இன்னும் பெயரிடப்படாத நான்காவது கப்பலும் விரைவில் சேவையில் சேரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நான்கு கப்பல்களில் ஒன்று எப்போதும் கடலில் ஆயுதங்களுடன் ரோந்துப் பணியில் இருக்கும். ஒன்று பயிற்சிக்காக பயன்படுத்தப்படும். இன்னொன்று பராமரிப்பு பணிகளில் இருக்கும். இவ்வாறு இந்தியாவின் கடல்சார் அணுசக்தி பாதுகாப்பு இடையறாது செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
K-4க்கு அடுத்த கட்டமாக, K-5 மற்றும் K-6 எனும் அதிக தூர தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளை DRDO உருவாக்கி வருகிறது. இவை 5,000 கிலோமீட்டருக்கு மேற்பட்ட தூரத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் வல்லமை பெறும் என கூறப்படுகிறது. இதற்கேற்ப, எதிர்காலத்தில் உருவாக்கப்படும் S5 வகை நீர்மூழ்கிக் கப்பல்கள், அரிஹந்த் வகையை விட இரட்டிப்பு அளவில் பெரியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடலின் ஆழத்தில் யாருக்கும் தெரியாத இடத்தில் மறைந்திருக்கும் இந்த மாபெரும் ஆயுத தளங்கள், தேசத்தின் பாதுகாப்பிற்காக ஒரு கட்டளையை எதிர்பார்த்து அமைதியாகக் காத்திருக்கின்றன.