இந்தியருக்கு உரிய சிகிச்சை வழங்காத கனடா மருத்துவமனை – உயிரிழப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு
கனடாவில் உள்ள ஒரு மருத்துவமனை, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் அலட்சியம் காட்டியதால் அவர் உயிரிழந்ததாக, அவரது மனைவி கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
கனடாவில் வசித்து வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 44 வயதான பிரசாந்த் ஸ்ரீகுமாருக்கு சமீபத்தில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் உடனடியாக எட்மண்டன் நகரில் உள்ள கிரே நன்ஸ் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றனர்.
ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதும், அவசர சிகிச்சை வழங்கப்படாமல் சுமார் 8 மணி நேரத்திற்கும் மேலாக அவர் காத்திருக்க வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த இடைப்பட்ட நேரத்தில், அவரது நெஞ்சு வலி தொடர்ந்து அதிகரித்ததாகவும், அதைப் பற்றி மருத்துவர்களிடம் தெரிவிக்கப்பட்ட போதும் அவர்கள் கவனம் செலுத்தவில்லை என்றும் அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
இறுதியில் சிகிச்சைக்காக அழைக்கப்பட்ட சமயத்தில், பிரசாந்த் ஸ்ரீகுமார் பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது. உரிய நேரத்தில் மருத்துவ உதவி கிடைத்திருந்தால் தனது கணவரின் உயிரைக் காப்பாற்றியிருக்க முடியும் என்றும், மருத்துவமனையின் அலட்சியமே இந்த மரணத்திற்குக் காரணம் என்றும் அவர் வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளார்.