தொடர்ந்து அதிகரிக்கும் வன்முறை : வங்கதேசத்தில் இந்துக்கள் எதிர்கொள்ளும் கடும் நெருக்கடி
வங்கதேசத்தில் ஒரே வாரத்திற்குள் இரண்டாவது இந்து இளைஞர் வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிகழ்வுகளுக்கு இந்திய அரசு கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ள நிலையில், அண்டை நாட்டில் நிலவும் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி முடிவடைந்ததிலிருந்து, வங்கதேசம் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பெரும் குழப்ப நிலையை சந்தித்து வருகிறது. முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகம் பொறுப்பேற்ற பிறகு, குறிப்பாக சிறுபான்மை சமூகங்களை குறிவைத்து நடைபெறும் வன்முறைகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுகின்றன. வரவிருக்கும் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ள தேர்தல் மற்றும் பொதுவாக்கெடுப்பு சூழலில், மாணவர் இயக்கத் தலைவர் ஹாடியின் கொலை, சமூக பதற்றத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக, இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வீடுகள், கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் தீவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த 25 வயதுடைய திபு சந்திர தாஸ் என்பவர், தாக்கப்பட்டு உயிரிழந்ததுடன், அவரது உடல் மரத்தில் கட்டி தீயிட்டு எரிக்கப்பட்ட சம்பவம் மிகுந்த கொடூரத்தை வெளிப்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, இந்து சமூகத்தினரிடையே பெரும் வேதனையும் கோபமும் எழுந்தது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, இந்திய மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்ததுடன், வங்கதேசத்துக்கான விசா சேவைகளை காலவரையின்றி இடைநிறுத்தியது. இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்தினம், ராஜ்பரி மாவட்டத்தில் 29 வயதான அம்ரித் மண்டல் என்ற இந்து இளைஞர் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். முன்னதாக, அரசியல் குழப்ப காலத்தில் நாட்டை விட்டு வெளியேறிய அவர், ஓராண்டுக்குப் பிறகு சமீபத்தில் தனது சொந்த ஊருக்குத் திரும்பியதாகவும், அங்கு சிலரிடம் மிரட்டி பணம் பறித்ததாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
சம்பவ நாளில், அம்ரித் மண்டல் தனது கூட்டாளிகளுடன் ஷாஹிதுல் இஸ்லாம் என்பவரது வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிராம மக்கள் ஒன்று திரண்டு அவர்களைக் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கியதில், அம்ரித் மண்டல் உயிரிழந்தார். இந்த சம்பவம் மத அடிப்படையிலான தாக்குதல் அல்ல என முகமது யூனுஸ் அரசு விளக்கம் அளித்ததுடன், அம்ரித் மண்டல் மீது ஏற்கனவே பல குற்ற வழக்குகள் இருந்ததாக தெரிவித்துள்ளது.
இத்தகைய சூழலில், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தனது கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில், முகமது யூனுஸ் சட்டவிரோதமாக ஆட்சியை கைப்பற்றியதாகவும், அவரது தலைமையில் வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் கடுமையான துன்பங்களுக்கு ஆளாகி வருவதாகவும் குற்றம்சாட்டினார். சமூக ஒற்றுமைக்கு அடையாளமாக இருந்த வங்கதேசம், தற்போது மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும், நாடு மதச்சார்பற்றதாக இருக்க வேண்டும் என்பதே தேச தந்தையின் கனவாக இருந்ததாகவும் அவர் நினைவூட்டினார்.
பங்களாதேஷ் இந்து–பௌத்த–கிறிஸ்தவ ஒற்றுமை கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 முதல் 20 வரை ஒன்பது இந்துக்கள் கொல்லப்பட்டதாகவும், 69 வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்பட்டதாகவும், 2,000க்கும் மேற்பட்ட வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கடந்த நவம்பர் மாதம் இந்துக்களுக்கு எதிரான தாக்குதல்களை கண்டித்து போராட்டம் நடத்திய இஸ்கான் அமைப்புடன் தொடர்புடைய துறவி சின்மய் கிருஷ்ண தாஸ், தேசத்துரோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். அவரது ஜாமீன் மனு சிட்டகாங் நீதிமன்றத்தில் நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில், அவருக்கு ஆதரவாக இருந்த வழக்கறிஞர் சைஃபுல் இஸ்லாம் அலிஃப் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
2024 நவம்பர் 26 முதல் 2025 ஜனவரி 25 வரை, வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக 76 வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகவும், இதில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக வடக்கு வங்கதேசத்தில் முக்கிய இந்து தலைவராக அறியப்பட்ட ஸ்ரீபபேஷ் சந்திர ராய் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், 150க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.