முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாள் அனுசரணம்
முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு, டெல்லியில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தொலைநோக்கு சிந்தனை கொண்ட தேசிய தலைவர் வாஜ்பாயின் 101வது பிறந்த நாள் நாடு முழுவதும் மரியாதையுடனும் உற்சாகத்துடனும் நினைவு கூரப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆகியோரும் வாஜ்பாய் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடியும் தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.
இதற்கு முன்பாக, வாஜ்பாயின் பிறந்த நாளை முன்னிட்டு எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்ட பிரதமர் மோடி, நாட்டு மக்களின் மனங்களில் நீங்காத இடம் பெற்றுள்ள முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு தனது பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தனது வாழ்க்கை முழுவதையும் தேச சேவைக்காக அர்ப்பணித்த சிறந்த தலைவராக வாஜ்பாய் விளங்கினார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வாஜ்பாய் ஒரு சிறந்த பேச்சாளர் மற்றும் கவிஞராக எப்போதும் நினைவுகூரப்படுவார் எனத் தெரிவித்த பிரதமர் மோடி, அவரது ஆளுமை, உழைப்பு மற்றும் தலைமைப் பண்புகள் இந்தியாவின் அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் தொடர்ந்து வழிகாட்டியாக இருக்கும் என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.